UPDATED : ஆக 30, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
முன்பு மருத்துவக்கல்வியே மாணவர்களின் கனவுப்படிப்பாக இருந்தது. இன்று மருத்துவப்படிப்பில் இடம் கிடைத்தாலும், இன்ஜினியரிங், எம்.பி.ஏ., போன்ற பிரிவுகளை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணமாககூறப்படுவது கல்விக்காகவே அதிக ஆண்டுகளை செலவிட வேண்டி யிருப்பது தான். தற்போதுள்ள சூழலில் ஏறத்தாழ 6 ஆண்டுகள் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு மட்டும் செலவாகிறது. அதற்கு பின்னர் எம்.எஸ்., எம்.டி., படிக்க விரும்புபவர்கள் 3 ஆண்டுகள் படிக்க வேண்டும்.
பின்னர் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’யாக எம்.சிஎச்., டி.எம்., படிப்புகளை தேர்வு செய்தால் மேலும் 3 ஆண்டுகள் செலவாகும். இதனால் படிப்புக்கு மட்டும் 12 ஆண்டுகள் செலவாகிறது. இதில் போட்டியும் அதிகம். எல்லோருக்கும் மேற்படிப்புக்கு இடம் கிடைத்துவிடுவதில்லை.
அதே சமயத்தில் பி.டெக்., அல்லது பி.இ., படித்து முடித்தவுடனேயே பலருக்கு நல்ல சம்பளத்துடன் முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடுகிறது. முதுநிலை படிப்பையும் நிறைவு செய்பவர்களுக்கு பல மடங்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
ஏறத்தாழ 33 வயதுவரை மருத்துவம் படிப்பவர்களுக்கு உரிய அளவில் சம்பளம் கிடைப்பதில்லை. ஆசிரியராகவோ, அரசு மருத்துவமனையிலோ பணியாற்றும் மருத்துவர்களின் சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது.
இன்ஜினியரிங் முடித்துவிட்டு பணியில் இருப்பவரின் சம்பளம் மருத்துவம் படித்தவரை விட ஐந்து மடங்கு அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கால நேரம் பார்க்காமல் பணியாற்ற வேண்டிய சூழல் இருந்தாலும், சம்பளமும் குறைவாக இருப்பது சிறந்த மாணவர்கள் மருத்துவத்துறையை தவிர்க்க முக்கிய காரணம்.
இது தவிர எம்.பி.ஏ.,வும் சிறந்த மாணவர்களை ஈர்க்கிறது. சிறந்த கல்லுõரிகளில் எம்.பி.ஏ., படிப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைப்பதுடன், லட்சக்கணக்கில் சம்பளமும் கிடைக்கிறது. ஒருவர் 26 வயதில் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வென்றாலும், 35 வயதில் தனது பணியில் சிறப்பான நிலையை எட்டிவிடுகிறார். ஆனால் மருத்தும் படிப்பவர்கள் 30 வயதுக்கு மேல் தான் வேலையே தேட வேண்டும் என்ற நிலை.
முன்பு மருத்துவம் படிப்பது கவுரவமாகவும் கருதப்பட்டது. இன்றைய சமூகத்தில் டாக்டர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்கின்றனர் மருத்துவ ஆசிரியர்கள். இதனால் பிளஸ் 1 சேரும் போதே மாணவர்கள் உயிரியல் பிரிவை ஒதுக்கிவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் இனிவருங்காலங்களில் மருத்துவப்படிப்பின் நிலை மேலும் மோசமடையலாம் என கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

