UPDATED : நவ 21, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
விழுப்புரம்: தமிழகத்தில் உயர் நிலைப் பள்ளிகளுக்கு வழங்கிய கம்ப்யூட்டர்கள் ஓராண்டாகியும் பயன்படுத்தாமல் வீணாகக் கிடக்கின்றன.
தமிழக அரசின் உத்தரவுப்படி எல்காட் நிறுவனம் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் கம்ப்யூட்டர் பிரிவு மாணவர்களுக்காக கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் லேப்-டாப், சாப்ட்வேர், டெஸ்க்-டாப் கம்ப்யூட்டர் எட்டு, டி.எம். பிரின்டர், ஐந்து கே.வி.ஏ., யு.பி.எஸ்., மோடம் வழங்குகின்றனர்.
முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் 99ம் ஆண்டு ஆறு கம்ப்யூட்டர்களும், 2000ம் ஆண்டு 45 கம்ப்யூட்டர்களும் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில், 116 அரசு மேல்நிலை பள்ளிகளில் 114 பள்ளிகளுக்கும், இரண்டு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கும், ஆறு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகளில் ஐந்து பள்ளிகளுக்கும் மட்டுமே கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. 124 மேல்நிலைப் பள்ளிகளில் 90 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்துள்ளனர். மற்ற பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
அதேபோல் 118 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 116 பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் இது வரை நியமிக்கவில்லை. மேலும் ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் வகுப்புகள் நடத்துவதா, ஒன்பது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நடத்துவதா என்று தெரியாமல் ஆசிரியர்கள் விழி பிதுங்கியுள்ளனர்.
ஓராண்டாகியும் இன்னும் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தாததால் அரசு பள்ளிகளில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டிலாவது உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கம்ப்யூட்டர் கற்று கொள்வார்களா என்பது, அரசு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் கம்ப்யூட்டர்கள் வழங்கியதோடு சரி, அதன் செயல்பாடு இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.
பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கினாலும் அதற்கு தேவையான சாப்ட்வேர் இணைப்பு முறையாக பல பள்ளிகளுக்கு வழங்கவில்லை. சென்னை எல்காட் நிறுவன ஊழியர்களைத் தவிர, தனியார் மூலம் கம்ப்யூட்டர்களை இயக்கினால் ஏற்படும் குளறுபடிக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர்களே பொறுப்பேற்கவேண்டும் என்பதால், ‘நமக்கு ஏன் வம்பு?’ என்று மற்ற வேலைகளில் இறங்கி விடுகின்றனர்.
‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதை’யாக, கம்ப்யூட்டர்களை அரசு கொடுத்தும் கம்ப்யூட்டர் வகுப்புக்கள் துவங்காததால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர்.
