UPDATED : நவ 22, 2014 12:00 AM
ADDED : நவ 22, 2014 12:14 PM
காரியாபட்டி: காரியாபட்டி அருகே இடியும் நிலையில் அங்கன்வாடி கட்டடம் உள்ளதால், இங்கு, பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் மறுத்து வருகின்றனர்.
காரியாபட்டி அருகே தோணுகால் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. கட்டடம் கட்டி 25 ஆண்டுகள் ஆன நிலையில் இன்றுவரை பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
இதில் தற்போது 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி கடந்த ஓராண்டாக அருகில் உள்ள நடுநிலைப் பள்ளி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. கட்டடத்தின் மேற்கூரை எந்நேரமும் விழும் நிலையில் இருப்பதால் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.தொடர் மழை காரணமாக கட்டடம் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த சில குழந்தைகளை பெற்றோர்கள் விபத்து நடக்குமோ என்ற பயத்தில் வீட்டிற்கு திரும்ப அழைத்து சென்றனர். தாசில்தார் பொன்ராமர், ஒன்றிய தலைவர் முத்தலட்சுமி, துணைத்தலைவர் ராமமூர்த்தி, "கட்டடத்தை சீரமைக்கவும், தற்போது குழந்தைகள் பாதுகாப்பான இடத்தில் படிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
