UPDATED : டிச 10, 2015 12:00 AM
ADDED : டிச 10, 2015 11:01 AM
மதுரை
: மதுரை
அரசு மருத்துவக் கல்லுாரியில் உயர் மேற்படிப்புகளை துவக்க, நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.
இக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் சேர்க்கையை 150லிருந்து 250 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மதுரையைச் சுற்றி தேனி, சிவகங்கை, துாத்துக்குடி, திருநெல்வேலியில் அரசு மருத்துவக் கல்லுாரிகள் உருவாகியது. இக்கல்லுாரிகளிலும் எம்.பி.பி.எஸ்., பாடத்திட்டம் உள்ளது. எனவே மதுரை மருத்துவக் கல்லுாரியில் உயர்மேற்படிப்பில் மாணவர்கள் சேர்க்கையை துவக்கவும், அதிகரிக்கவும் வேண்டிய சூழ்நிலை உள்ளது. இங்குள்ள எட்டு அறுவை சிகிச்சை பிரிவுகளில் இருதயம், மூளைநரம்பியல், பிளாஸ்டிக் மற்றும் குழந்தைகள் அறுவை சிகிச்சையில் மட்டுமே எம்.சி.எச்., என்ற ஸ்பெஷாலிட்டி உயர்மேற்படிப்பு உள்ளது.
புற்றுநோய், ரத்தநாளம், குடல் இரைப்பை, கல்லீரல், சிறுநீரகத் துறையில் எம்.சி.எச்., பாடப்பிரிவு கொண்டு வரவேண்டும். மருத்துவப் பிரிவுகளை பொறுத்தவரை நரம்பியல், இருதயப்பிரிவில் மட்டுமே டி.எம்., எனப்படும் உயர்மேற்படிப்பு உள்ளது. மதுரையை மேம்பட்ட சிகிச்சைக்கான மையமாக கொண்டு வர, இக்கல்லுாரியில் எம்.சி.எச்., மற்றும் டி.எம்., படிப்புகளை கொண்டுவர வேண்டும்.
