UPDATED : நவ 08, 2009 12:00 AM
ADDED : நவ 08, 2009 09:06 AM
பள்ளி பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக, தினமலர் நடத்தும், ஜெயித்துக் காட்டுவோம் வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் துவங்கியது.
காலையில் பத்தாம் வகுப்பு மாணவியருக்கான நிகழ்ச்சி நடந்தது. அடாத மழையிலும், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவியர் திரண்டு வந்தனர்.
அவர்களிடையே தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
மழையை பொருட்படுத்தாமல், பெருந்திரளாக மாணவியர் வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. தொடர்ச்சியாக மழை பெய்கிறது, மாணவர்கள் எப்படி நிகழ்ச்சிக்கு வருவார்களோ என்று நினைத்து, மிகவும் கவலைப்பட்டேன். ஆனால், புயல், கடும் மழையை பொருட்படுத்தாமல், காலையில் இருந்தே மாணவியர் திரளாக வந்து கொண்டிருந்ததை பார்த்ததும், என் கவலை நீங்கியது.
பதினான்கு ஆண்டுகளுக்கு முன், ஏழை, எளிய மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன், சிறிய அளவில் இந்நிகழ்ச்சி ஆரம்பிக் கப்பட்டது.
பெண்கள் கல்வி கற் றால் தான் சமுதாயம் முன்னேறும். அது தற்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. கல்வியில் மாணவர்கள் வெற்றி பெற்றால் தான், வாழ்க்கையிலும் வெற்றிபெற முடியும். நான் பத்தாம் வகுப்பு படிக் கும் வரை, சாதாரண மாணவனாகத் தான் இருந்தேன்.
இன்டர் மீடியட்டுக்கு வந்ததும், நன்றாக படிக்க ஆரம்பித்தேன். கல்லூரியில் இரண்டு பேர் முதலிடம் பெற்றனர். அதில், நானும் ஒருவன். பி.எஸ்சி., மற்றும் எம்.ஏ., விலும், பல்கலைக் கழகத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். என் உழைப்பு தான் எல்லாவற்றுக்கும் காரணம். இரவு 12 மணி வரை விழித்திருந்து நான் படிப்பேன். மாணவர்கள் தினமும் இரவில் குறைந்தது நான்கு மணி நேரம் படிக்க வேண்டும். அப்போது தான், மதிப்பெண்கள் அதிகமாக கிடைக்கும்.
ஆங்கிலம் உலக மொழியாக இருக்கிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் உலகளாவிய மொழியாக அது இருக்கிறது. ஆங்கிலம், கடினமான மொழி தான். 50 ஆண்டுகள் ஆங் கிலம் படிப்பவர்கள் கூட, சரியான முறையில் ஆங்கிலம் பேசுகின்றனர் என்று கூற முடியாது.
கடினமான வார்த்தைகளுக்கு, டிக்ஷனரியைப் பார்த்து பொருள் தெரிந்து கொள்ள வேண்டும். உச்சரிப்பை நன்றாக தெரிந்து கொள்ள, டிவியில் தினமும், பிபிசி செய்திகளை கேட்க வேண்டும். சிறப்பான ஆசிரியர்கள், இங்கு பாடம் நடத்துகின்றனர். நன்றாக கவனித்து, ஆசிரியர்கள் தரும் குறிப்புகளை எழுதி, வீட்டிற்குச் சென்று, அதை விரிவாக எழுதிப் பார்த்து படியுங்கள். சந்தேகம் இருந்தால், ஆசிரியர்களைக் கேளுங்கள். அதன்மூலம், கடினமான பகுதிகளையும் நீங்கள் எளிதில் எதிர்கொள்ளலாம். தேர்வில் அனைவரும் அதிக மதிப்பெண் கள் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
