வேலைவாய்ப்புக்கு பள்ளியில் பெறும் மதிப்பெண்களும் அவசியம்
வேலைவாய்ப்புக்கு பள்ளியில் பெறும் மதிப்பெண்களும் அவசியம்
UPDATED : நவ 08, 2009 12:00 AM
ADDED : நவ 08, 2009 08:30 AM
தினமலர் சென்னை எஸ்.ஆர். எம்., பல்கலையுடன் இணைந்து, மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக ஜெயித்துக் காட்டுவோம் கல்வி ஆலோசனை நிகழ்ச்சியை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடத்தியது.
காலை 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், மதியம் பிளஸ்2 மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. எம்.எஸ். தண்டபாணி தொகுத்து வழங்கினார்.
உடல் நலம் மற்றும் மனநலம் பேராசிரியர் கண்ணன், சமூகஅறிவியல் கல்லூரி, மதுரை: தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கினால்தான் மேல்நிலையில் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் சீட் மற்றும் பாடப்பிரிவு கிடைக்கும்.
வேலை தேடும்போது பள்ளியில் பெறும் மதிப்பெண்களையும் நிறுவனங்கள் எதிர்பார்ப்பதால் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் தேவை. மாணவர்கள் தேர்வு நேரத்தில் பீசா, பர்கர் போன்ற உணவால் உடலை கெடுத்துக் கொள்ளக் கூடாது. கீரையை அதிகம் சாப்பிட வேண்டும். வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும்.
பத்தாம் வகுப்பு
ஆங்கிலம் எஸ்.ஜோதிமதி, அரசு உயர்நிலைப் பள்ளி, புளியங்குளம்:
ஆங்கிலத்தில் முதல் நான்கு பாடங்களை நன்கு படித்தால் கட்டுரைவினா, பத்திவினா சிறுவினாக்கள் உட்பட அனைத்தையும் எழுதிவிடலாம். செய்யுளிலும் மூன்றை மனப்பாடமாக படிப்பதுடன், பாடல் எழுதியவர்
பெயரையும் எழுதி பார்த்து படிக்க வேண்டும். இரண்டாவது தாளில் மூன்றில் ஒருபங்காக சுருக்கி எழுதுதல், விரிவுபடுத்தி எழுதுதல், கடிதம் எழுதுதல், இலக்கணம் போன்றவற்றில் நன்கு பயிற்சி பெற வேண்டும்.
கணிதம் எஸ்.கிறிஸ்டோபர் ஜெயசீலன், அரசு உயர்நிலைப் பள்ளி,அவனியாபுரம்:
கணிதப் பாடத்தில் மேலோட்டமாக படித்தாலும், ஆழ்ந்து படித்தாலும் நூறு மதிப்பெண்களை பெற முடியும். ஆழ்ந்து படித்தால் பின்னாளில் போட்டித் தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும். நீங்கள் யாருக்காகவும் உங்கள் பாணியை மாற்றிக் கொள்ளாமல் உங்கள் பாணியிலேயே படித்து எழுத வேண்டும். சூத்திரங்களை உங்களுக்கு பிடித்த இடங்களில் எழுதி வைத்து படிக்க வேண்டும்.
அறிவியல் ஜி.மருதமுத்து, மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளி,:
அறிவியலில் நூறு மதிப்பெண் பெற அட்டை டூ அட்டை படிக்க வேண்டும். இதற்கென சில வழிமுறைகள் உள்ளன. மொத்தமுள்ள 15 பாடங்களில் 2, 7, 13வது பாடங்களில் ஐந்து மதிப்பெண் வினாக்கள் கிடையாது. ஆனால், அதற்கு சமமாக ஒன்று, இரண்டு மதிப் பெண் வினாக்கள் கேட்கப்படும். எனவே, இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி கேட்கப்படும் வினாக்களை திரும்ப திரும்ப எழுதிப் படிக்க வேண்டும்.
சமூக அறிவியல் எஸ்.ஜேம்ஸ் லூர்துராஜ், செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி:
சமூக அறிவியலில் நூறு மதிப்பெண் பெறுவது அறிவியல், கணிதப் பாடங்களைவிட மிகவும் எளிது. தோல்வி அடைவதுதான் கடினம். பாடங் களை புரிந்து படிக்க வேண்டும். வரலாற்று பாடத்தில் வரைபடம், ஆண்டுகளை ஒன்றுக்கொன்று தொடர்பு வைத்து ஞாபகத்தில் வைக்க வேண்டும். வரைபடத்தை மீண்டும் மீண்டும் எழுதி பார்க்க வேண்டும்.
பிளஸ்2
ஆங்கிலம் ஆர்.பழனிவேல்ராஜன், சி.இ.ஓ.ஏ., மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி:
ஆங்கிலத்தில் குறைந்த மதிப்பெண் பெறுவதுதான் கடினம். அதிக மதிப்பெண் பெற வேண்டுமானால் மொழிப் பாடங்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். முதல்தாள் தேர்வுக்கு புத்தகத்தின் பின்பகுதியில் உள்ளவற்றை நன்கு படித்தாலே அப்ஜெக்டிவ் வினாக்களின் 65 மதிப்பெண்களை எளிதில் பெறலாம். இரண்டாம் தாளில் 80 மதிப் பெண்களை எளிதில் வாங்கமுடியும்.
கணிதம் ஆர்.சந்திரசேகரன், டி நோபிலி மெட்ரிக்., பள்ளி:
சூத்திரங்கள், வரைபடத்தை காலையில் படித்தால் நன்கு மனதில் நிற்கும். முதல் தொகுதியில் 1, 2, 3, 6, 7, 8, 9ம் பாடங்களை மட்டும் நன்கு படித்தாலே 194 மதிப்பெண்களை பெறலாம். கடந்த ஆண்டுகளின் பொதுத்தேர்வு வினாக்களுக்கு விடையெழுதி பார்க்க வேண்டும். பத்து மதிப்பெண், ஆறு மதிப்பெண், ஒரு மதிப்பெண் வினாக்கள் என வரிசைப்படி விடை எழுத வேண்டும்.
இயற்பியல் வி.சுப்ரமணியன், தியாகராஜா மில்ஸ் மேல்நிலைப் பள்ளி, கப்பலூர்:
புத்தகத்தின் பின்பகுதியில் இருந்து 18 ஒரு மதிப்பெண் வினாக்கள் கட்டாயம் வரும். எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் 3 மதிப் பெண் வினாக்கள் நான்கு வருவது உறுதி. 2, 7, 8வது பாடங்களில் கட்டாய கணக்கு நிச்சயம். 4, 6, 9, 10வது பாடங்களில் பத்து மதிப்பெண் வினாக்களை படித்தால் போதும். இவ்வினாக்களுக்கு முக்கிய வார்த்தைகளை மட்டும்
எழுதினால் போதும். பிராப்ளம் எழுதும்போது சூத்திரம், பிரதியிடல், முடிவு மட்டும் எழுதினாலும் முழுமதிப்பெண்கள் பெறலாம்.
வேதியியல் இ.ஸ்ரீனிவாசன், அரசு மேல்நிலைப் பள்ளி, சமயநல்லூர்:
அனைத்து சமன்பாடுகளையும் எழுதிப் பார்க்க வேண்டும். கனிம வேதியியலில் மனனம் செய்வது, உயிர்வேதியியலில் புரிந்து கொள்தல், கரிமவேதியியலில் எழுதிப் பார்ப்பது மிகஅவசியம். கணக்குகள், பெயர் கொண்ட சமன்பாடுகள், வருவித்தலுக்கு (டெரிவேஷன்) முக்கியத்துவம் தரவேண்டும். வினாக்களை தேர்வு செய்யும்போது சமன்பாடுகள், கணக்குகளை தேர்வு செய்ய வேண்டும்.
உயிரியல் டி.கணேசன், சி.இ.ஓ.ஏ., மெட்ரிக்., பள்ளி:
விலங்கியலின் முதல் பாடம் அல்லது தாவரவியலில் 5வது பாடம் படித்தாலே பாஸ் ஆகிவிடலாம். விலங்கியலில் முதல்3 பாடங்கள் படித்தால் 60 மதிப்பெண் பெறலாம். தாவரவியலில் முதல் 4 பாடங்கள் படித்தால் 67 மதிப்பெண் பெறலாம். 200 மதிப்பெண் பெற அனைத்து பாடங்களிலும் 5 மதிப்பெண் வினாக்களை (விலங்கியலில் 5, 6வது பாடங்களை தவிர) படிக்க வேண்டும். தாவரவியலில் முதல் பாடத்தில் மலர் வரைபடம், மலர் வாய்ப்பாடு முக்கியம். பெந்தம் மற்றும் ஹூக்கர் வாய்ப்பாடு முக்கியம். 5வது பாடத்தில் அனைத்து சுழற்சியும் மிகமுக்கியம்.
சிறப்பு பஸ் வசதி:
ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்காக மாநகராட்சி சார்பில் நகரின் முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தினமலர் எல்.ராமசுப்பு மற்றும் மாநகராட்சி கல்வி அலுவலர் தனலட்சுமி ஆகியோரும் ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் மனவளர்ச்சியற்ற குழந்தைகளை ஆதரிக்க வேண்டும் என்ற லிட்டில் ஸ்பேஸ் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. மதுரை ராஜ்மகால், தங்கமயில் ஜூவல்லரி, ஸ்ரீமீனாட்சி பேன் ஹவுஸ், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி ஆகியவை இணைந்து வழங்கின.
