வீட்டில் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை: இறையன்பு பேச்சு
வீட்டில் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை: இறையன்பு பேச்சு
UPDATED : நவ 08, 2009 12:00 AM
ADDED : நவ 08, 2009 10:04 AM
ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெற்றோர் கடமை என்ற தலைப்பில் பேசியதாவது:
அடுத்த ஐந்து மாதங்களில் பொதுத் தேர்வு வர உள்ளது. இந்நேரத்தில், மாணவர்களை நெறிப்படுத்தும் வகையில், இந்நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் சிறப்பு. மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமெனில், வீட்டுச் சூழல் மிகவும் முக்கியம். பெற்றோர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால், மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் செல்லாது. அதனால் ஐந்து மாதங்களுக்கு சண்டை போடுவதில்லை என்று சமாதான உடன்படிக்கை செய்து கொள்வது நல்லது.
பிள்ளைகளை மையப்படுத்தி, குடும்ப நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக, அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். டிவியை சத்தமாக வைக்கக் கூடாது. டிவி நிகழ்ச்சிகள் அதிகம் பார்ப் பதை குறைத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், பெற்றோர் பேச வேண்டும். உன்னால் முடியும் என்று கூறுங்கள். சத்தான காய்கறிகள், பழ வகைகளை உணவாகக் கொடுக்க வேண்டும். டீ, காபி கேட்டால், மகிழ்ச்சியுடன் உடனே போட்டுத் தர வேண்டும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும்.
தேர்வின்போது, பெற்றோர்களே தேவையில்லாமல், பிள்ளைகளிடையே ஒருவித பதட்டத்தை ஏற்படுத்துகின்றனர். அதிகமான பெற்றோர், அலுவலகத்திற்கு நீண்ட விடுமுறை போட்டுவிட்டு, பிள்ளைகளுடன் உட்கார்ந்து விடுகின்றனர். விட்டால், பெற்றோர்களே தேர்வெழுதி விடுவார்கள். அந்த நிலை தற்போது இருக்கிறது. தேர்வு என்பது, மகிழ்ச்சியான ஒரு அனுபவம் என்பதை, மாணவர்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும். மகிழ்ச்சியாக எதைச் செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். மதிப்பெண் என்பது ஒரு அளவுகோள். அதுவே முக்கியம் கிடையாது. பாடத்தை அனுபவித்து படிப்பது தான் முக்கியம்.
மாதத்திற்கு ஒருமுறை, பிள்ளைகளை புத்தக கடைகளுக்கு பெற்றோர் அழைத்துச் செல்ல வேண்டும். அவர்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இந்த செயல்பாடு, பிள்ளைகளிடையே படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும். பிள்ளைகள் நன்றாக படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை பெற்றோர் உருவாக்கிக் கொடுத்தால், அவர்கள் வரலாறு படைப் பர். அவர்களது வாழ்க்கையும் நன்றாக இருக்கும். இவ்வாறு இறையன்பு பேசினார்.
இறையன்பு மேலும் பேசும்போது குறிப்பிட்டதாவது:
* பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இப்போதே, கவுன்ட்-டவுண் துவங்கி விட்டது. மாணவர்கள் முதல் வேலையாக, அட்டவணை தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டிய பாடங்களை அதில் குறிக்க வேண்டும். அட்டவணையில் உள்ளபடி, தவறாமல் படிக்க வேண்டும்.
* வாரத்திற்கு ஒரு முறை, ரிவிஷன் செய்ய வேண்டும். வகுப்பில் நடத்தும் பாடங்களை, அன்றைக்கே வீட்டில் படித்து முடித்துவிட வேண்டும். வகுப் பில் நடத்தும் பாடங்களை 90 சதவீதம் அளவிற்காவது உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அப்படி கவனித்தால், சம்பந்தப்பட்ட பகுதிகள் மறக்காது.
* முக்கியமான சில வாக்கியங்களை திரும்பத் திரும்ப படித்தால், அது நம் ஆழ் மனதிற்கு சென்று விடும். அதுபோன்று ஆழ் மனதில் பதியும் கருத்துக்கள், என்றைக்கும் மறக்கவே மறக்காது.
* டிவியில் மூழ்கும் பெற்றோர்க்கு இறையன்பு கூறிய குட்டிக் கதை:
வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் திருடு போய்விட்டதாக, போலீசில் ஒரு பெற்றோர் புகார் செய்தனர். திருடுவதை எப்போது கண்டுபிடித்தீர்கள் என போலீசார் கேட்டதற்கு, நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த டிவியை தூக்கிச் செல்லும்போது தான் கண்டுபிடித்தோம் என்றனர்.
அப்படியெனில், வீட்டில் உள்ள மற்ற பொருட்கள் எல்லாம் ஒவ்வொன்றாக திருடு போனபோது, குடும்பத்தினர் கண்களுக்கு தெரியவில்லை. கடைசியாக, அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த டிவியையும் திருட முயற்சித்தபோது தான், விழித்திருக்கின்றனர். எனவே, டிவி நிகழ்ச்சிகள் அதிகம் பார்ப்பதை பெற்றோர் குறைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது, பொதுத்தேர்வு வரையாவது பெற்றோர் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு இறையன்பு கூறினார்.
