கவனம் சிதறினால் வாழ்க்கையே சிதறும்: பர்வீன் சுல்தானா அறிவுரை
கவனம் சிதறினால் வாழ்க்கையே சிதறும்: பர்வீன் சுல்தானா அறிவுரை
UPDATED : நவ 08, 2009 12:00 AM
ADDED : நவ 08, 2009 10:03 AM
தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், கல்லூரி ஆசிரியையும், பட்டிமன்றப் பேச்சாளருமான பர்வீன் சுல்தானா பேசியதாவது:
தினமலர் பத்திரிகை, மாணவர்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தாயாக இருந்து, மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் இந்நிகழ்ச்சியை நடத்துகிறார்.
இந்த ஆண்டு இந்நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்கள் அனைவரும் வெற்றிபெற முனைந்திருக்கின்றீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இங்கு பேசுபவர்களால் உங்களுக்கு வழிகாட்டத் தான் முடியும். வெற்றி பெற, படிக்க வேண்டியது மாணவர்களாகிய உங்களது முயற்சியால் மட்டுமே சாத்தியமானது.
ஒரு பாடம் நடத்தப்படும் போது, பல குறிப்புகள் நமக்கு கிடைக்கின்றன. பலர், கவனச் சிதறலால் குறிப்புகளை எடுக்காமல் வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர். ஒரு ஆசிரியராக இருந்து நான் கூறுகிறேன். பதில் சொல்வது புத்திசாலித்தனம் என்று பலர் நினைக்கின்றனர். அது தவறு, கேள்வி கேட்பதே புத்திசாலித்தனம்.
வாழ்க்கையில் உயர்வு பெறுவது என்பது பரிட்சையில் மதிப்பெண் வாங்குவது மாதிரி. நன்றாக படித்தால், நிறைய மதிப்பெண் தானாக வரும். நிறைய மதிப்பெண் வாங்கினால், நிறைய சம்பாதிக்கலாம். இதை நன்றாக படித்தால், பலருக்கு நீங்கள் சம்பளம் கொடுக்கலாம். ஒரு வினாடி கவனச் சிதறல் வெற்றியை பறிக்கிறது, ஒரு நிமிட கவனச் சிதறல் வளர்ச்சியை தடுக்கிறது, ஒரு மணிநேர கவனச் சிதறல் வாழ்க்கையையே பறிக்கிறது. வாழ்க்கையில் மாணவர்களாகிய நீங்கள் கவனச் சிதறலை வளர விடாமல், விழிப்புணர்வோடு செயல்பட்டால் மட்டுமே வாழ்க்கையில் மேலான நிலையை எட்ட முடியும். இவ்வாறு பர்வீன் சுல்தானா பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் சென்னை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பத்மபிரியா (492/500), இரண்டாமிடம் பிடித்த கல்யாணி (490/500) இருவருக்கும் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பதக்கங்கள் அணிவித்து, புத்தகங்கள் வழங்கி கவுரவித்தார். மாணவர்களது பெற்றோருக்கும் ஆசிரியர் வாழ்த்து தெரிவித்தார்.
அர்த்தம் புரிந்து படித்தால் வெற்றி தானாக வரும். மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் படிக்காமல், அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு படித்தால், வெற்றி தானாக வந்து சேரும் என்று பேராசிரியர் ஞானசம்பந்தன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஜெயித்துக் காட்டுவோம்&'நிகழ்ச்சியில், படிப்பின் முக்கியத்துவம் என்ற தலைப்பில், ஞானசம்பந்தன் பேசியதாவது:
இன்றைய மாணவர்களது அறிவு, பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. மாணவர்கள், கம்ப்யூட்டர் பயிற்சி பெறுவது மிகவும் அவசியம். தமிழை படித்தால் சிறப்பாக வரலாம். இதற்கு உதாரணமாக, தினமலர் நாளிதழை கூறலாம். இன்று, உலகத் தமிழர்கள் பலரது கைகளுக்கு தினமலர் சென்று சேர்கிறது. தமிழ்மொழி சிறப்பாக அமைய, அதைச் சரியாக உச்சரிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் படிக்காமல், படிப்பை உன்னிப்பாக கவனித்து, அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு படித்தால் வெற்றி தானாக வந்து சேரும். இவ்வாறு ஞானசம்பந்தன் பேசினார்.
