UPDATED : நவ 24, 2009 12:00 AM
ADDED : நவ 24, 2009 05:27 PM
நாகர்கோவில்: அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி கவுன்சிங்கிற்காக நாகர்கோவில் வந்த மூன்று பேர் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியாமல் திரும்பினர்.
தமிழகத்தின் முதல் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி நாகர்கோவில் கோட்டாரில் துவங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் 2009-2010ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கான கவுன்சிலிங் சென்னை அரும்பாக்கம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்தில் நவ. 23ம் தேதி (நேற்று) நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அரசு ஆயுர்வேத கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்த அனைத்து மாணவ மாணவியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாப்பா இவாஞ்சலின், உசிலம்பட்டியை சேர்ந்த வசந்த், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தி ஆகிய மூன்று பேர் நாகர்கோவில் கோட்டார் மருத்துவ கல்லூரி வளாகத்திற்கு வந்தனர். கவுன்சிலிங் இங்கு நடப்பதாக வந்ததாக கூறினர். அவர்கள் மருத்துவ கல்லூரி தனி அலுவலரை சந்தித்தனர். அவர் சென்னை இயக்குனரகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அங்குள்ள அதிகாரிகள் மாணவ மாணவியர் மூன்று பேரும் நாகர்கோவில் வந்ததற்கான ஆதார கடிதம் கல்லூரி தனி அலுவலர் கொடுத்து அனுப்பினால் அவர்களுக்கு மறுநாள் கவுன்சிலிங் நடத்துவதாக தெரிவித்துள்ளார். ஆனால் தனி அலுவலர் பரிந்துரை கடிதம் கொடுக்கவில்லை என அந்த மாணவ மாணவியர் தெரிவித்தனர். என்றாலும் சென்னைக்கு சென்று முயற்சி செய்யப்போவதாக கூறி மூன்று பேரும் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
