UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM
ADDED : ஜூலை 19, 2023 05:50 PM
கோவை: கோவை பாரதியார் பல்கலையின் கீழ், பருவத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.அக மற்றும் பருவத்தேர்வுகள் 75:25 என்ற விகிதப்படி நடந்த நிலையில் சில பாடங்களுக்கு, 50:50 என்ற முறையில் மதிப்பீடு செய்யப்பட்டதால், சிலருக்கு குறிப்பிட்ட சில பாடங்களில், பெயில் என்று பதிவாகியிருந்தது. மாணவர்கள் பதட்டத்துடன், கல்லுாரிகளை தொடர்பு கொண்டனர். கல்லுாரிகளில் இருந்து, பாரதியார் பல்கலைக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் தெரிவிக்கப்பட்டது.கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறுகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், நடந்த தேர்வுகளில் பல மாணவர்களுக்கு ஆப்சென்ட் என பதிவாகியுள்ளது. தவிர, தமிழ் பாடத்தில் மதிப்பீட்டு முறை தவறாக மேற்கொண்டதால், பலருக்கு பெயில் என பதிவாகி முடிவுகள் வெளியாகின. பல கல்லுாரிகளில் இதுபோன்ற தவறுகள் நடந்துள்ளன; பல்கலை நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளோம் என்றார்.பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பொன்பாண்டியன் கூறுகையில், நான் முதல்வன் திட்டத்தில் பல மாணவர்கள் பதிவு எண்களை சரியாக எழுதாமல் விட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, ஆப்சென்ட் என பதிவாகியுள்ளது. இறுதியாண்டில் தான், நான் முதல்வன் திட்டம் நடைமுறைப்படுத்தினோம். இதனால், 100 மதிப்பெண்களை 50க்கு குறைத்து, பின்னர் மதிப்பீடு வழங்கப்பட்டது. இதனால், ஒரு சில தாள்கள் பழைய முறைப்படி, மதிப்பீடு செய்ததால் குழப்பம் எழுந்தது. குழப்பங்கள் ஓரிரு நாட்களில் சரிசெய்யப்படும். கல்லுாரி முதல்வர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட, லாகின் ஐ.டி., பயன்படுத்தி மாணவர்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என்றார்.
