UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM
ADDED : ஜூலை 27, 2023 04:29 PM
சிவகங்கை:
முதுநிலை ஆசிரியர்களுக்கு 28 பாடவேளைகளை 24 பாடவேளைகளாக குறைக்க வேண்டும், என பள்ளிக்கல்வி இயக்குநருக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கழகம் தெரிவித்துள்ளதாவது:
மேல்நிலைப்பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளுக்கு மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் தேர்வில் 9, 10ம் வகுப்புக்கு மட்டுமே பதவி உயர்வு நியமனம் செய்யப்பட வேண்டும். பிளஸ்1, 2 வகுப்புகளுக்கு முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனமாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். முதுகலையாசிரியர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், மாவட்டக்கல்வி அலுவலர் நியமனத்தில் 30 சதவீதம் என செங்குத்து பதவி உயர்வு வழங்க வேண்டும். முதுநிலை மொழி ஆசிரியர்களுக்கு 1:30 என்ற வகையிலும் பாட ஆசிரியர்களுக்கு 1:15 என்ற விகிதத்தில் மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரம் நிர்ணயம் செய்ய வேண்டும். முதுநிலை ஆசிரியர்களுக்கு 24 பாடவேளைகள் மட்டுமே வழங்க வேண்டும். 28 பாடவேளைகள்கட்டாயம் என உயர் தொடக்க, உயர் நிலை வகுப்புகளுக்கு அனுப்பி பட்டதாரி ஆசிரியர் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.ரா.இளங்கோவன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் தெரிவித்ததாவது:
எங்களது சங்கம் சார்பில்பள்ளிக்கல்வி இயக்குநருக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். இதில் குறிப்பாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28 பாடவேளை என்பதை 24 பாடவேளையாக குறைக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர்களை உயர்நிலை மாணவர்களுக்கு பாடம் எடுக்க வைத்து பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனத்தை குறைப்பதை நிறுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம், என்றார்.
