UPDATED : ஜன 12, 2010 12:00 AM
ADDED : ஜன 12, 2010 01:42 PM
பாடத்திட்டங்கள் வகுப்பதில் அரசியல் தலையீடு ஏதும் இருக்காது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த விளக்கத்துக்கு பின், சமச்சீர் கல்வி மசோதா சட்டசபையில் நிறைவேறியது.
சமச்சீர் கல்வி மசோதா மீது சட்டசபையில் நடந்த விவாதம்:
சண்முகம் - அ.தி.மு.க: சமச்சீர் கல்வி சட்டத்தில், கொள்கை அளவில் மாறுபட்ட கருத்து இல்லை. சட்டத்தில் உள்ள குறைகள் திருத்தப்பட வேண்டும். வரைவு பாடத் திட்டம், வரைவு சட்டத்தில் பல்வேறு தரப்பினருக்கு அச்ச உணர்வு உள்ளது. இச்சட்டத்தில் தனியாருக்கு சாதகமான பல அம்சங்கள் உள்ளன. 40 சதவீத பாடங்கள் ஆங்கில வழி மாணவர்களுக்கு சாதகமக உள்ளன. பாடத்திட்டங்கள் வகுப்பதை அரசியல்வாதிகளிடம் கொடுத் தால் சீரழிந்து விடுமென, சமச்சீர் கல்வி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். மெட்ரிக் பள்ளிகளில் செய்முறை உண்டு. எனவே, அவர்களுக்கு சாதகமாக, 9, 10ம் வகுப்புகளில் செய்முறை சேர்க்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு இந்த பாடத்திட்டத்தில் போதிய பயிற்சி இல்லை. மாணவர்களுக்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டும்.
இந்த முறையில், தவறு செய்பவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்.
இ.எஸ்.எஸ்.ராமன் - காங்: பணக்கார பள்ளிகள் சமச்சீர் கல்விக்கு எதிராக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இத் திட்டத்தை கொண்டு வந்த அரசுக்கு பாராட்டுக்கள்.
மகேந்திரன் - மார்க்சிஸ்ட்: சமச்சீர் கல்வி கொண்டு வந்தாலும், மெட்ரிக் இயக்குனரகம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனி இயக்குனரகம் எதற்கு தேவை. சமச்சீர் கல்வி பற்றி பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட அதிகாரி விஜயகுமார் அளித்த பரிந்துரைகள் என்னென்ன என்பது தெரிவிக்கப்படவில்லை.
அமைச்சர் தங்கம் தென்னரசு: எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் நான்கு வித வாரியங்கள் உள்ளன. வெவ்வேறு தேர்வு முறை, பாடத்திட்டங்கள் உள்ளன. இவற்றை மாற்றி, பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையை கொண்டு வர வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றத்தான், சமச்சீர் கல்வியை முதல்வர் கொண்டு வந்தார்.
பாடத்திட்டம் வகுப்பதில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை. முழுக்க முழுக்க கல்வியாளர்கள் தான் தேர்வு செய்தனர். 4,000 வள மையங்களில் விவாதிக்கப்பட்டு, இணையதளத்திலும் கருத்துக்கள் கேட்கப்பட்ட பின் தான் இது இறுதி செய்யப்படுகிறது.
மெட்ரிகுலேஷன் முறையில் உள்ள நல்லவற்றை ஏற்பதில் தவறில்லை. செய்முறை தேர்வு நடத் துவதால் எந்த தவறும் இல்லை. இரு மொழிக் கொள்கை தான் பள்ளிக் கல்வியின் ஆதாரமாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்த பின், குரல் ஓட்டெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.
