UPDATED : ஜன 12, 2010 12:00 AM
ADDED : ஜன 12, 2010 01:45 PM
பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை சந்திக்கும் மாணவர்கள், தேர்வு நாட்களில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவு பற்றி விளக்கும்கூட்டம், சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் நடந்தது. கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்ற இக்கூட்டத்தில், பிரபல சமையல் கலை நிபுணர் ஜேக்கப் அளித்த உணவு டிப்ஸ் :
தேர்வு நாட்களில் தொடர்ந்து படிப்பதால் ஏற்படும் அசதி, கடைசி நேரத்தில் படிப்பதால் ஏற்படும் டென்ஷன் ஆகிய பிரச்னைகளுக்கு, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம் அல்லது ஆரஞ்சு பழத்தை உரித்து சாப்பிடலாம்.மனப்பாடம் செய்வதால் ஏற்படும் அயர்ச்சியால் நன்கு படிப்பவர்கள் கூட கட்டுப்பாட்டை இழந்து டென்ஷன் ஆகி விடுகின்றனர். முட்டை, பால், பிஸ்கட், வாழைப்பழம் சாப்பிட்டு இது போன்ற டென்ஷனை குறைக்க முடியும்.
தேர்வு பற்றிய பதற்றம், படித்தது வருமா வராதா என்ற கவலை, பயம், திட்டமிடாமை ஆகியவற்றால் ஏற்படும் பயம், பதற்றம், நடுக்கம் ஆகியவை, எலுமிச்சை ஜூஸ் குடித்தால் அகலும்.தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றிய சந்தேகம், எதை படிப்பது, எதை விடுவது என்பதில் ஏற்படும் குழப்பம் இதனால் ஏற்படும் உறக்கமின்மையால் மனதளவில் தடுமாற்றம் ஏற்படும்.
தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பதால் தூக்கம் அதிகமாக வரும். இரவு நேரங்களில் குரூப் ஸ்டடி செய்வதுதான் காரணம். இதனால் பயனில்லை என்பதால் தவிர்க்கலாம். இது போன்ற பிற விஷயங்களில் கவனம் சிதறுவதை தடுக்க, திராட்சை ஜூஸ் குடிக்கலாம். தேர்வு நாட்களில் பூரி, பொங்கலை தவிர்க்கலாம். நினைவுத் திறனை பெருக்க பேரிக்காய், கொய்யா அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.இவ்வாறு, ஜேக்கப் பேசினார்.
மாணவர்களுக்கு உதவும் பாரம்பரிய சமையல் முறைகள் பற்றி சமையல் கலை நிபுணர் ரேவதி கூறியதாவது:
தேர்வு நேரத்தில் மாணவர்கள் தங்கள் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். சப்பாத்தியில் கீரை நறுக்கிப் போட்டு சாப்பிட்டால் சமச்சீரான சத்து கிடைக்கும். பயத்தம் பருப்பை வெல்லத்துடன் கலந்து சாப்பிடலாம். கேழ்வரகு கூழ், முளைகட்டிய பயறு மாவு, இட்லி காலையில் சாப்பிட சிறந்த உணவு.மோருடன் சர்க்கரை கலந்து குடிப்பது உடலுக்கு சக்தி தரும். உலர் திராட்சை, எள்ளுருண்டை, கடலை உருண்டை, பொரி விளங்காய் உருண்டைகளை படிக்கும் போது கொறிக்கலாம். வேர்க்கடலையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். எப்போதும் எளிதில் ஜீரணிக்கும் உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது. இரவு உறங்கும் முன் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.இவ்வாறு, ரேவதி கூறினார்.
பள்ளி செயலாளர் சந்தியா, மேலாண்மை துறை முதல்வர் முருகேசன், இயக்குனர் ஸ்ரீகாந்த், கேட்டரிங் துறைத் தலைவர் பெர்னார்டு உட்பட ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் சுவையான மதிய உணவு பரிமாறப்பட்டது.
