UPDATED : அக் 10, 2023 12:00 AM
ADDED : அக் 10, 2023 05:30 PM
சென்னை:
சந்திராயன் -3 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இஸ்ரோ வில் பணியாற்றும் முன்னாள் மாணவர்கள் 12 பேரை சென்னை ஐ.ஐ.டி கவுரவித்தது.சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஓவர் தி மூன் வித் சந்திராயன் -3 என்ற நிகழ்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி மற்றும் பல்வேறு அரசு பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடினர். கடந்த 2011ம் ஆண்டு பி.எச்.டி பட்டம் பெற்ற இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் உன்னிகிருஷ்ணன் நாயர் மற்றும் 2016ம் ஆண்டில் இயந்திர பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோர் இந்த விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.சந்திரயான் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பேசுகையில், இது அறிவியல் சமூகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டின் சாதனையாகவும் மாறியுள்ளது. லேண்டர் எந்தப் பாதையில் சென்றாலும் அது தரையிறங்கும் வகையில் வடிவமைத்தோம். அதுதான் இந்த முறை எங்களின் வியூகம், என்றார். சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் பேராசிரியர் காமகோடி பேசுகையில், கணினி அறிவியல் மட்டுமே முக்கியம் என்று கருதப்பட்ட காலம் போய்விட்டது. பொறியியலின் ஒவ்வொரு துறையிலும் ஏதாவது ஒரு பெரிய பங்களிப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது பி.டெக் மற்றும் பொறியியல் படிக்க விரும்பும் ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களுக்கு சொல்லப்படும் செய்தி, என்றார்.சென்னை ஐ.ஐ.டி யின் நிறுவன மேம்பாட்டு அலுவலக தலைமை செயல் அதிகாரி கவிராஜ் நாயர், பேராசிரியர் மகேஷ் பஞ்சகுனுலா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் உறையாற்றினர்.
