UPDATED : டிச 27, 2023 12:00 AM
ADDED : டிச 27, 2023 06:11 PM
மேட்டுப்பாளையம்:
ஜடையம்பாளையம் புதூரில், புதிதாக கட்டிய பள்ளி வகுப்பறை கட்டடத்தை, காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.காரமடை ஊராட்சி ஒன்றியம், ஜடையம்பாளையம் ஊராட்சி, ஜடையம்பாளையம் புதூரில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது.அதனால், 32.22 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன. அந்த வகுப்பறை சுவர்களில், பாடத் திட்டம் சம்பந்தமான ஓவியங்கள் சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பூமியின் சுழற்சி எவ்வாறு ஏற்படுகிறது, என்பது குறித்த படங்கள் வரையப்பட்டுள்ளன.தமிழ், ஆங்கில எழுத்துக்கள், வாய்ப்பாடுகள் ஆகியவை எழுதப்பட்டுள்ளன. வகுப்பறைகள் கட்டி முடிந்த நிலையில், இதன் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக, பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார். ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.இந்த விழாவில் ஊராட்சி துணைத் தலைவர் மாரண்ணன், காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, வட்டார கல்வி அலுவலர் சிவசங்கரி உள்பட ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி வரவேற்றார். உதவி ஆசிரியர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.