UPDATED : ஜன 20, 2024 12:00 AM
ADDED : ஜன 20, 2024 10:10 AM
உடுமலை:
பிளஸ் 1, 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் மாதம் துவங்குகிறது. தற்போது அதற்கான முன்னோட்டமாக, முதல் திருப்புதல் தேர்வு நடக்கிறது.மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மாதிரியில் வினாக்கள் தயார் செய்யப்பட்டு, அதே நடைமுறைகளை பின்பற்றியும் திருப்புதல் தேர்வு பள்ளிகளில் நடக்கிறது.இரண்டாம் திருப்புதல் தேர்வு, வரும் 22ம் தேதி முதல் துவங்குகிறது. பாடங்களை முடித்து விட்டதால், மாணவர்களுக்கு அடுத்தகட்டமாக பொதுத்தேர்வுக்கான வழிமுறைகள், தேர்வு எழுதுவது குறித்து, உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறை, மாணவர்கள் தயாராக இருப்பது, பதட்டமில்லாமல் தேர்வை எதிர்கொள்வது, நேரத்தை திட்டமிடுதல் குறித்து ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.அதேபோல், சுற்றுப்பகுதி பள்ளிகளிலும், ஆசிரியர்கள் சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தி மாணவர்களை ஊக்குவித்து வருகின்றனர்.