UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM
ADDED : ஜூன் 05, 2024 11:00 PM

2024ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு (பி.எப்.எஸ்.ஐ.,), இ-காமர்ஸ், மற்றும் விருந்தோம்பல் துறைகள் அதிக வாய்ப்புகளை பெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த வேலை சந்தையில் மீட்சியைக் குறிப்பதாக, தொழில்முறை நெட்வொர்க்கிங் தளமான 'அப்னா' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சியால், இந்த காலண்டர் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் பி.எப்.எஸ்.ஐ., துறைகளில் பணியாளர்களுக்கான தேவை அதிகபட்சமாக 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இ-காமர்ஸ் துறை 17 சதவீத வளர்ச்சியைக் கண்டது; சேவைகள் மற்றும் விருந்தோம்பல் தொழில்கள் 13 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இந்தியாவின் தென்பகுதியில் உள்ள வேலை சந்தை, கடந்த ஆண்டின் 18 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 23 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை போன்ற நகரங்கள் மொத்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளன. லக்னோ, கோவை மற்றும் குவாலியர் போன்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் டிஜிட்டல் மயமாக்கல் அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.