UPDATED : செப் 27, 2024 12:00 AM
ADDED : செப் 27, 2024 06:07 PM

சென்னை:
தற்சார்பு இந்தியா முயற்சியின் ஒரு பகுதியாக, மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பல்வேறு தயாரிப்புகளை ராணுவ பயன்பாட்டிற்காக தொலைத் தொடர்பு பொறியியல் ராணுவக் கல்லூரியிடம் ஒப்படைத்தன.
இந்திய ராணுவத்தில் வளர்ந்து வரும் தேவைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள உள்நாட்டுத் தயாரிப்புகளில் மேம்பட்ட தொழில்நுட்பங்களான குவாண்டம், சிப் வடிவமைப்பு, 5 ஜி, உத்திசார் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இது சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான பிளாட்பார்மை உருவாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் கிருஷ்ணன், உள்நாட்டு உற்பத்தி குறித்தும், ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவத்தைக் குறித்தும் எடுத்துரைத்தார். விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) திட்டத்தை நோக்கி பயணிக்கவும், போர்க் காலத் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும் இராணுவம் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு அவசியம் என்று கூறினார்.
இந்த கூட்டாண்மை எதிர்கால பாதுகாப்பு கண்டுபிடிப்புகளுக்கு உந்துதலாகவும், வேகமாக உருவாகி வரும் போர்க்கள சூழலின் சவால்களை எதிர்கொள்ள இந்திய ராணுவத்தை தயார்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.