UPDATED : ஜன 30, 2025 12:00 AM
ADDED : ஜன 30, 2025 08:06 AM

ஷெனாய் நகர்:
தபால் தலை சேகரிப்பு என்பது குழந்தைகளுக்கு மிக பயனுள்ள, பாதுகாப்பான பொழுதுபோக்கு. இதன் வாயிலாக, மாணவர்கள் புதிய உலகத்தை காண்கின்றனர் என தலைமை செயலர் முருகானந்தம் கூறினார்.
தமிழக வட்ட அஞ்சல் துறையின், 14வது மாநில அளவிலான தபால் தலை கண்காட்சி, ஷெனாய் நகரில் நேற்று துவங்கியது.கண்காட்சியை, தமிழகஅரசின் தலைமை செயலர் முருகானந்தம் துவக்கி வைத்தார்.
நிகழ்வில், புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்கு, கிழக்கிந்தியதோல், பிரம்பு கைவினைப் பொருட்கள் ஆகியவற்றின் சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப்பட்டன.
விழாவில், தலைமை செயலர் முருகானந்தம் பேசியதாவது:
தபால் தலை சேகரிப்பு,குழந்தைகளுக்கு மிக பயனுள்ள, பாதுகாப்பான பொழுதுபோக்கு. இதன் வாயிலாக மாணவர்கள் புதிய உலகத்தை காண்கின்றனர். அன்றைய காலத்தில் காகிதம் இல்லாததால், முத்திரைகள் இருந்தன. தற்போது காகிதம் இருப்பதால், அஞ்சல் தலை இருக்கிறது.
தமிழர் பண்பாடு மிகப் பழமையானது; தாய்மொழியான தமிழ் உலகின் மிகப்பழமையான மொழி. சங்கப் பாடல்களில் நம் பண்பாடு குறித்து அறியலாம்; ஆனால், அதற்கான ஆதாரங்கள் இல்லை.
தற்போது தமிழக அரசு, தொல்லியல் துறை பல்வேறு ஆய்வுகளை செய்து, உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறது. மதுரைக்கு அருகே கீழடி நகர நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இரும்பின் பயன்பாடு தமிழகத்தில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
சிந்துவெளி நாகரிகத்தில், அவர்கள் பயன்படுத்திய மொழி கண்டுபிடிக்கப்படவில்லை; நிறைய குறியீடுகளை படிக்க முடியவில்லை. அதேபோல், தமிழகத்தில் பானை ஓடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான குறியீடுகளையும் படிக்க முடியவில்லை.
இதனால், சிந்துவெளி நாகரிகத்துக்கும், தமிழக நாகரிகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்ததை அறிய முடிகிறது. நம் மொழியும், நாகரிகமும் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கண்காட்சியில் டி.வி.ஆர்., தபால் தலை
தபால் தலை கண்காட்சியில், பல்வேறு தலைப்புகளில், 510-க்கும் மேற்பட்ட தபால் தலை, உறைகளை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அரங்கில், 114வது பலகையில், தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் வரலாற்றுடன் கூடிய தபால் தலை இடம் பெற்றிருந்தது.பிப்., 1 வரை நடக்கும் இக்கண்காட்சியை தினமும் காலை 10:00 முதல் மாலை 7:00 மணி வரை பார்வையிடலாம். மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.