தமிழ் தெரிந்தவர்களுக்கு உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி
தமிழ் தெரிந்தவர்களுக்கு உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி
UPDATED : டிச 22, 2010 12:00 AM
ADDED : டிச 22, 2010 12:46 PM
தூத்துக்குடி: தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நவீன மீன்பிடி பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி பெற உள்ளவர்கள் இன்று விண்ணப்பிக்க வேண்டும் என்று மீன்வளத்துறை இணை இயக்குநர் ரெங்கராஜூ தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மீன்வளத்துறை மூலம் விரிவாக்கம் மற்றும் பயிற்சி நிலையத்தில் 5.1.2011 முதல் நவீன மீன்பிடி பயிற்சி (மார்டன் பிஸ்சிங் கோர்ஸ்) மற்றும் சிறுதரக் கம்மியர் பயிற்சி (ஜூனியர் மெக்கானிக் கோர்ஸ்) ஆகிய இரண்டு பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன. பயிற்சி காலம் 10 மாதங்களாகும்.
பயிற்சியின் போது மாதம் ஒன்றுக்கு 400 ரூபாய் வீதம் உபகார சம்பளம் வழங்கப்படும். இரண்டு பயிற்சிகளிலும் குறுகிய கால பயிற்சியாக மருத்துவ முதலுதவி பயிற்சி, ஆதார தீ தடுப்பு பயிற்சி, கடலோர காவல்படை போன்ற பயிற்சிகள் சம்பந்தப்பட்ட துறையினரால் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 18 வயதிற்கு மேல் 35 வயதிற்கு உட்பட்ட நன்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் நவீன மீன்பிடி பயிற்சிக்கும், 18 வயதுக்கு மேல் 30 வயதிற்குட்பட்ட குறைந்தப்பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சிறுதரக் கம்மியர் பயிற்சிக்கும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவங்களை தூத்துக்குடி திரேஸ்புரம் வடக்கு கடற்கரை சாலையில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் (விரிவாக்கம் மற்றும் பயிற்சி) அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். இன்று விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். 22ம் தேதி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேர்காணலுக்கு வரவேண்டும். இவ்வாறு இணை இயக்குநர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
