UPDATED : பிப் 01, 2011 12:00 AM
ADDED : பிப் 01, 2011 01:32 PM
நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த உயர்வு அதிகளவில் இருக்கிறது. கடந்த 2009 ம் ஆண்டு தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை 19.7% என்ற அளவில் இருந்தது. ஆனால் 2010 ம் ஆண்டில் அந்த அளவு 25.1% என்று அதிகரித்துள்ளது. மேலும் இந்த வருடம் அது 30% என்ற அளவில் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஏனெனில் மாநிலத்தின் பல அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. சுமார் 1000 பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் இல்லை. எனவே அரசு தனது பள்ளிகள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அதிகளவு மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல மட்டங்களிலும் எழுந்துள்ளது.
மேலும் 6 முதல் 14 வயது வரையுள்ள கிராமப்புற மாணவர்கள் பள்ளியில் சேர்வதும் அதிகரித்துள்ளது. கடந்த 2009 -இல் 21.8% என்ற அளவாக இருந்ததானது, 2010 -இல் 24.3% என்ற அளவில் அதிகரித்துள்ளது.தேசிய அளவில் குறிப்பாக தென்மாநிலங்களில் 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேரும் விகிதம் அதிகரித்துள்ளது. அந்த விகிதம் 29.7% என்பதிலிருந்து 36.1% என்பதாக அதிகரித்துள்ளது.
