தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலைகளில் ஒரே பாடத்திட்டம்?

அண்ணா பல்கலைகளில் ஒரே பாடத்திட்டம்?

அண்ணா பல்கலைகளில் ஒரே பாடத்திட்டம்?


UPDATED : பிப் 18, 2011 12:00 AM

ADDED : பிப் 18, 2011 02:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2011 12:00 AM ADDED : பிப் 18, 2011 02:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்து விவாதிக்க, வரும் 24ம் தேதி, மதுரையில் நடக்கவுள்ள தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப கவுன்சில் கூட்டத்தில், இப்பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களும், சென்னையில், அண்ணா பல்கலைக் கழகமும் இயங்கி வருகின்றன.


அந்தந்த பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகள், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்க, அண்ணா பல்கலைக் கழகம் நான்கு உறுப்புக் கல்லூரிகளுடன் இயங்கி வருகிறது. இந்த ஆறு பல்கலைக் கழகங்களை ஒருங்கிணைத்து வழிநடத்த, தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலின் முதல் கூட்டம், சமீபத்தில் நடந்தது.


அக்கூட்டத்தில், அண்ணா பல்கலைக் கழக பாடத்திட்டம், வகுப்புகள், தேர்வுகள் தொடர்பான கால அட்டவணை, தேர்வு சீர்திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது.ஆறு பல்கலைக் கழகங்களிலும் பாடத்திட்டத்தில் வேறுபாடுகள் இருப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக் கழகம் பிரிக்கப்பட்டபோது, புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள், அண்ணா பல்கலையின் பாடத்திட்டத்தை பின்பற்றின.


பின், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைகள் தங்களது பகுதிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன. இதனால், பல்கலைகள் இடையே பாடத்திட்டத்தில் வேறுபாடுகள் காணப்பட்டன. இதை மாற்றி, ஐந்து அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் மற்றும் அண்ணா பல்கலையில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வருவது என, கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


இதன்படி, பாடத் திட்டத்தில், 80 சதவீதம், ஆறு பல்கலைக் கழகங்களிலும் ஒரே மாதிரி இருக்கும். மீதமுள்ள, 20 சதவீத பாடத்திட்டத்தில், பல்கலைகள் தங்களது பகுதிக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வரலாம். உதாரணமாக, ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்திருப்பதால், சென்னை அண்ணா பல்கலைக் கழகம், சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலையில் இத்துறைகள் குறித்த பாடப் பகுதிகளும், ஜவுளி நிறுவனங்கள் நிறைந்திருப்பதால், கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலயில் அந்தத் துறை குறித்த பாடப்பகுதிகளும் 20 சதவீதம் இடம்பெறும்.


வகுப்புகள், தேர்வுகள் தொடர்பான கால அட்டவணையையும், ஆறு பல்கலைக் கழகங்களுக்கும் பொதுவானதாக உருவாக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம், மாணவர்கள் ஒரு பல்கலையிலிருந்து மற்றொரு பல்கலைக்கு மாறும் போது, பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணையில் பிரச்னை இருக்காது என கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பல்கலை தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வருவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


ஒரே மாதிரியான பாடத்திட்டம், கால அட்டவணை மற்றும் தேர்வு சீர்திருத்தத்தை, வரும் 2011 - 12ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தவும் தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த மாற்றங்கள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப கவுன்சில் வரும் 24ம் தேதி மதுரையில் கூட்டியுள்ள கூட்டத்தில் ஆறு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கின்றனர்.


இதை தொடர்ந்து, மேலும் பல கூட்டங்கள் நடத்தி, துணைவேந்தர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து உருவாக்கப்படுகிறது. இறுதியாக மே மாதத்தில் நடைபெறும் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலர் கணேசன், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் குமார் ஜெயந்த் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


அக்கூட்டத்தில், ஒரே மாதிரியான பாடத்திட்டம், கால அட்டவணை மற்றும் தேர்வு சீர்திருத்தம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அமல்படுத்தப்படவுள்ளது என, கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us