UPDATED : மார் 11, 2011 12:00 AM
ADDED : மார் 11, 2011 09:41 AM
அறிவியல் துறையின் முன்னேற்றத்தை, குற்றப் பின்னணிகளைக் கண்டறிந்து நீதி வழங்குவதற்காக பயன்படுத்திக் கொள்ளும் துறைதான் தடய அறிவியல் துறை.
சமூக நீதி, சட்டம், நியாயம் போன்றவற்றைக் காப்பாற்ற உதவுவதில் தடய அறிவியலுக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த துறையில் எந்த எல்லையும் இல்லை.
இயற்பியல், வேதியியல், உயிரியியல், மருத்துவம் படித்த எந்த மாணவரும் இந்த துறையில் கல்வி பயின்று சாதிக்க முடியும்.
இத்துறை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தடய மருந்தியல் என்பது பேத்தாலஜி (நோய்க்கான காரணங்களை அறியும் அறிவியல்) சைக்யாட்ரி (மனநோய்க்கு சிகிச்சை அளிக்கும் அறிவியல்), சைக்காலஜி (மனோதத்துவ அறிவியல்) தடய மருந்தியல் மற்றும் பல் மருத்துவம் அடங்கியதாகும்.
ஆய்வுக்கூட அறிவியல் என்பது, வேதியியல், உயிரியியல், விஷத்தன்மை அறிதல், குண்டு, துப்பாக்கி, இரவை போன்றவற்றின் வேகத்தை ஆராயும் ஆய்வு, கைரேகை, தேவையான கேள்விகளை தயாரித்தல் மற்றும் அடையாளங்களை பதிவு செய்தல் போன்ற பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.
நிகழ்விட அறிவியல் என்பது, குற்றம் நடந்த இடத்தில் சென்று அதன் பின்னணியை ஆராய்வதாகும். அதாவது தீ விபத்து, குண்டு வெடிப்பு அல்லது போதைப் பொருள் கிடங்குகளுக்கு நேரடியாகச் சென்று தடயங்களையும், காரணங்களையும் கண்டறிவது தொடர்பான பிரிவாகும் இது.
இந்த கல்வியில் எதுவும் சாதாரண விஷயமில்லை. சாதாரணமாக செய்யும் சிறிய தவறு கூட, நீதியை தவறாக பயன்படுத்த வழிவகுத்துவிடக் கூடும். எனவே, இந்த கல்வியைப் பயில அதிக ஆர்வமும், புத்திக் கூர்மையும் நிச்சயம் வேண்டும்.
இந்தியாவில் பல பல்கலைக்கழகங்களில் போரன்சிக் சயின்ஸ் துறையில் இளநிலை பட்டபடிப்பு, முதுநிலை பட்டபடிப்பு, டிப்ளமோ, சான்றிதழ் கல்வி என பல முறைகளில் பாடப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் சேர அனைத்திந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
என்ன படிக்கலாம்
பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை எடுத்து படித்த மாணவர்கள் பி.எஸ்சி. போரன்சிக் சயின்ஸை தேர்வு செய்து படிக்கலாம். கணிதப் பாடத்திலும் நல்ல அறிவுத்திறன் பெற்றிருப்பது அவசியம். அதேப்போல பி.எஸ்சி பாடப்பிரிவினை படித்த மாணவர்கள் எம்.எஸ்சி. போரன்சிக் சயின்ஸ் படிக்கலாம்.
முக்கிய பாடப்பிரிவுகள்
போரன்சிக் பேதாலஜிஸ்ட் - இறந்த உடலை பரிசோதித்து, (போஸ்ட் மார்ட்டம்) இறப்பின் காரணம், நேரம், தன்மையை அறிதல், ஆய்வுக் கூட ஆராய்ச்சி - ஆய்வுக் கூடத்தில் ரத்த மற்றும் டி.என்.ஏ. பரிசோதனை செய்தல், போரன்சிக் என்ஜினியர் - சாலை விபத்து, தீ விபத்து, படுகாயத்தை ஏற்படுத்தும் விபத்துகள் பற்றி ஆய்வு செய்தல், போரன்சிக் ஆர்கிடெக்ட்ஸ் - சவக்கூடங்கள் மற்றும் போரன்சிக் ஆய்வுக் கூடங்களை வடிவமைத்தல், போரன்சிக் வெட்னரி அறுவை சிகிச்சை - விலங்குகளை பரிசோதித்து அல்லது உடற்கூறு அறுவை சிகிச்சை செய்து திடீர் மரணங்களுக்கான காரணத்தை கண்டறிதல், வைல்ட்லைப் போரன்சிக் ஸ்பெஷலிஸ்ட் - வனப்பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத செயல்கள், யானை தந்தம் மற்றும் புலி, மான், சிங்க தோல்கள் கடத்தல்களை கண்டறிதல், போரன்சிக் சைக்யாட்ரிஸ்ட் - மன நலம் மற்றும் நரம்பியல் தொடர்பான அறிவியல் மற்றும் மருந்துகள் குறித்த அறிவு கொண்டிருத்தல், போரன்சிக் டாக்ஸியாலஜிஸ்ட் - உடலில் இருக்கும் வேதியியல் அல்லது விஷத்தன்மை உள்ள பொருட்களை ஆராய்ந்து கண்டறிவது, போரன்சிக் ஓடோன்டாலஜிஸ்ட் - பற்கள் தொடர்பான அறிவு, கற்பழிப்பு போன்ற குற்றங்களில் ஏற்படும் தடயங்களை அறிய உதவுதல், போரன்சிக் செரோலாஜிஸ்ட் - திருட்டு, துன்புறுத்துதல், கற்பழிப்பு போன்ற குற்றங்களில் உடலில் ஏற்பட்ட காயங்களை தடயங்களாக வைத்து உண்மையைக் கண்டறிதல் என பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன.
கல்வி நிலையங்கள்
பஞ்சாபி பல்கலைக்கழகம் இரண்டு ஆண்டு எம்.எஸ்சி.யுடன் (போரன்சிக் சயின்ஸ்) மேம்படுத்தப்பட்ட சில கல்விகளையும் அளிக்கிறது. எம்.எஸ்சி முடித்ததும் பிஎச்.டி. படிக்கும் வாய்ப்பையும் சில பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன.
அறிவியல் பாடம் எடுக்காத மாணவர்களுக்கு ஒராண்டு பாடப்பிரிவும் உள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆந்த்ரோபாலாஜி துறை போரன்சிக் சயின்ஸ் படிப்பில் ஓராண்டு இளநிலை சான்றிதழ் கல்வியை அளிக்கிறது.
இதுமட்டுமல்லாமல், போரன்சிக் ஸ்பீச் சயின்ஸ் கல்வி தற்போது அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. குற்றவாளிகளைக் கண்டறிவதில் முக்கிய பங்கும் வகிக்கிறது. மைசூரில் உள்ள அனைத்திந்திய ஸ்பீச் அண்ட் ஹியரிங் மையம் போரன்சிக் ஸ்பீச் சயின்ஸ் கல்வியை அளிக்கிறது.
அமிதி யூனிவர்சிட்டி (நொய்டா), ஹைதராபாத்தில் உள்ள ஒசமானியா பல்கலைக் கழகம், லக்னோ பல்கலைக்கழகம், மும்பையில் உள்ள செயின்ட் ஜேவியர்ஸ் கல்லூரி ஆகியவை போரன்சிக் கல்வியை அளிக்கும் சில கல்வி நிலையங்களாகும்.
உதவித் தொகை
இந்த துறையில் பயிலும் மாணவர்களுக்கு காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் உதவித் தொகையும் வழங்குகிறது. எம்.எஸ்சி படித்தபிறகு, குற்றவியல் துறையில் பிஎச்.டி. செய்ய பதிவு செய்திருந்தாலோ அல்லது பதிவு செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு www.bprd.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.
இந்தியாவில் வாய்ப்பு
தடயவியலில், விஷத்தன்மை அறிதல், பையாலஜி, குற்றப்பின்னணியை ஆராய்தல் போன்ற துறைகளுக்கு எப்போதுமே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உலக அளவில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சியை இத்துறையில் பயன்படுத்துவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. தடய அறிவியல் துறைக்கென குஜராத் போரன்சிக் சயின்ஸ் யூனிவர்சிட்டி இயங்குவதே இதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தும்.
போரன்சிக் சயின்ஸ் படித்த மாணவர்களுக்கு பல்வேறு பணியிடங்கள் உள்ளன. சி.பி.ஐ., ஐ.பி., காவல்துறை போன்ற துறைகளுக்கு பொதுத் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதுமட்டுமல்லாமல், மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்கள், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, சைபர் கிரைம் இன்வெஸ்டிகேஷன், மனித உரிமை மீறலை தடுக்கும் அமைப்பு, காப்பீட்டுத் துறை, காவல்துறை என பல்வேறு துறைகளில் பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது.
