பட்டயப்படிப்பு கல்லூரிகள் : விதிமுறைகள் உருவாக்க முடிவு
பட்டயப்படிப்பு கல்லூரிகள் : விதிமுறைகள் உருவாக்க முடிவு
UPDATED : மார் 11, 2011 12:00 AM
ADDED : மார் 11, 2011 09:51 AM
முதுகலை மேலாண்மை பட்டயப் படிப்புகளை நடத்தும் கல்லூரிகளுக்காக, சுய கட்டுப்பாட்டு விதிமுறைகளை உருவாக்க இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனம் (எப்.ஐ.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளது.
முதுகலை மேலாண்மை பட்டயப் படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் தொடர்பாக, அகில இந்திய தொழில் கல்வி கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ.,) 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. இதையடுத்து, இந்த பாட வகுப்புகளை நடத்தும் கல்லூரிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த டிசம்பர் 28ம் தேதி சில வழிகாட்டிக் குறிப்புகள் வெளியிடப்பட்டன.
இதுதொடர்பாக, எப்.ஐ.சி.சி.ஐ.,யின் இயக்குனர் ஜெனரல் ராஜிவ்குமார் மேலும் கூறியதாவது: அகில இந்திய தொழில்கல்வி கவுன்சிலில் 3,800 வர்த்தக பள்ளிகள் பதிவு செய்துள்ளன. இவற்றில் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் முதுகலை மேலாண்மை பட்டயப் படிப்புகளை நடத்துகின்றன.
இந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ., சமீபத்தில் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், முதுகலை மேலாண்மை பட்டயப்படிப்புகள் தொடர்பாக, கல்வி நிறுவனங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுப்பாடுகளால் கல்வி நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் பெருமளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், முதுகலை மேலாண்மை பட்டயப்படிப்புகளை நடத்தும் கல்லூரிகளுக்காக சுய கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டிக் குறிப்புகளை உருவாக்க எங்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இந்த வழிகாட்டிக் குறிப்புகள் தயாரிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்ட பின், இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும். இவ்வாறு ராஜிவ்குமார் கூறினார்.
