UPDATED : மார் 31, 2011 12:00 AM
ADDED : மார் 31, 2011 06:05 PM
இந்திய மக்களின் கல்வியறிவு விகிதம் 9.2% அதிகரித்து, 74.௦04% என்ற அளவில் உயர்ந்துள்ளது.
2011 - இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் தற்காலிக விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்திய மக்களின் கல்வியறிவு விகிதம் 9.2% அதிகரித்துள்ளது. இதன்மூலம் கடந்த 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 64.83% ஆக இருந்த கல்வியறிவு விகிதம் தற்போது 74.04% ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஆண்களைவிட, பெண்களின் கல்வியறிவு விகிதம் அதிகரித்துள்ளது. ஆண்களின் கல்வியறிவு விகிதம் 6.9% அதிகரித்து, 75.26% -இலிருந்து 82.14% ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பெண்களின் கல்வியறிவு விகிதம் 11.8% அதிகரித்து, 53.67% -இலிருந்து 65.46% ஆக உயர்ந்துள்ளது.
இந்த தற்காலிக விவரத்தின்படி, 7 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள மக்களில் 74% கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். கடந்த 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கல்வியறிவற்றவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 77 லட்சத்து 941 என்று இருந்தது. ஆனால் இந்த 10 வருடங்களில் அது 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரத்து 847 என்ற அளவில் குறைந்து கல்வியறிவு மேம்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே கல்வியறிவில் வழக்கம்போல் கேரளம் முதலிடம் பெற்றுள்ளது. அம்மாநில கல்வியறிவு விகிதம் 93.91%. இரண்டாவது இடத்தில் லட்சத்தீவு உள்ளது. அதன் விகிதம் 92.28%. நாட்டிலேயே கல்வியறிவு குறைந்த மாநிலங்களில் பீகார் முதல் இடத்தை பிடித்துள்ளது. அம்மாநில கல்வியறிவு விகிதம் 63.82%. பீகாருக்கு சற்றே மேம்பட்டு அருணாச்சல பிரதேசம் இருக்கிறது. 66.95% என்ற விகிதத்தை அம்மாநிலம் கொண்டுள்ளது.
