பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்; 1.55 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்
பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்; 1.55 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்
UPDATED : அக் 14, 2024 12:00 AM
ADDED : அக் 14, 2024 10:41 AM

புதுடில்லி:
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சியாக தொடங்கப்பட்ட பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் 1.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு தொடர்ந்து 3வது முறையாக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசின் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் பிரதான குற்றச்சாட்டே, வேலைவாய்ப்பு பற்றாக்குறையை போக்கவில்லை என்பதுதான்.
இந்த சூழலில், நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், முக்கிய அம்சமாக, தனியார் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் முறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டமானது, இளைஞர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் பாலமாக இருக்கும் என்றும், இதன்மூலம், திறமையான இளைஞர்களை கண்டறிந்து, தகுதியான வேலைவாய்ப்பை உருவாக்கித் தர முடியும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 109 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் 37 மாநிலங்களில் உள்ள 737 மாவட்டங்களில் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தத்திட்டத்தில் எண்ணெய், எரிபொருள், டிராவல், வாகனங்கள், வங்கி என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இணைந்துள்ளன. குறிப்பாக, முன்னணி நிறுவனங்களான எல் அன்ட் டி, முத்தூட் பைனான்ஸ், ரிலையன்ஸ் நிறுவனம், ஜூபிலன்ட் புட்வொர்க்ஸ், மாருதி சுசுகி உள்பட 193 நிறுவனங்கள், இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பை வழங்க முன்வந்துள்ளன.