கட்-ஆப் மதிப்பெண் குறைப்பு; புதிதாக விண்ணப்பிக்க சென்டாக் அழைப்பு
கட்-ஆப் மதிப்பெண் குறைப்பு; புதிதாக விண்ணப்பிக்க சென்டாக் அழைப்பு
UPDATED : அக் 14, 2024 12:00 AM
ADDED : அக் 14, 2024 10:32 AM

புதுச்சேரி:
கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டதை தொடர்ந்து சிறப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்காக முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கு சென்டாக் விண்ணப்பம் வரவேற்றுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் எம்.டி.எஸ்., முதுநிலை படிப்பு இடங்களை முற்றிலும் நிரப்பும் வகையில் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்ணை குறைத்து அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.
அதன் அடிப்படையில் சென்டாக் நிர்வாக இடங்களில் முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தகுதி மதிப்பெண்ணை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி எம்.டி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பிக்க பொது பிரிவினர், இடபுள்யூ.எஸ்., பிரிவினருக்கு 50 பெர்சன்டைல் அதாவது 263 கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போது 28.308 பெர்சன்டைலாக (196 மதிப்பெண்) குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பொது பிரிவு மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு முன்பு இருந்த 45 பெர்சன்டைல் (246 மதிப்பெண்) 23.308 பெர்சன்டைலாக (180 மதிப்பெண்) குறைக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு 40 பெர்சன்டைலாக (230 மதிப்பெண்) இருந்தது, 18.308 பெர்சன்டைலாக (164 மதிப்பெண்) குறைக்கப்பட்டுள்ளது.
எனவே வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் வரும் 16ம் தேதி மாலை 5;00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். 18ம் தேதி மாலை 5;00 மணி வரை பதிவு கட்டணம் சென்டாக் இணையம் வழியாக செலுத்தலாம்.
எம்.டி.எஸ்., படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் விண்ணப்பித்து போதிய கட் ஆப் மதிப்பெண் இல்லாமல் தகுதி பட்டியலில் இருந்து வெளியேற்ற மாணவர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு நிர்வாக இடங்களுக்கு தற்போது புதிதாக விண்ணப்பிக்கலாம்.
பதிவு கட்டணமாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இந்த சிறப்பு கவுன்சிலிங்கில் சீட் ஒதுக்கப்படாவிட்டால், இந்த பதிவு கட்டணம் திரும்பி தரப்படும். ஒருவேளை சீட் ஒதுக்கப்பட்டு இடம் கிடைத்த கல்லுாரியில் சேராவிட்டால் இந்த பதிவு கட்டணம் திருப்பி தரப்படாது என்று சென்டாக் அறிவித்துள்ளது.