200 முதுநிலை ஆசிரியர் பணியிடம் உருவாக்க கவர்னர் சக்சேனா ஒப்புதல்
200 முதுநிலை ஆசிரியர் பணியிடம் உருவாக்க கவர்னர் சக்சேனா ஒப்புதல்
UPDATED : அக் 14, 2024 12:00 AM
ADDED : அக் 14, 2024 10:25 AM

புதுடில்லி:
கூடுதலாக 200 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க துணைநிலை கவர்னர் சக்சேனா ஒப்புதல் அளித்தார்.
இதுகுறித்து, கவர்னர் மாளிகை அதிகாரிகள் கூறியதாவது:
டில்லி அரசின் கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 200 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக உருவாக்க துணை நிலை கவர்னர் சக்சேனா நேற்று ஒப்புதல் அளித்தார். இந்த ஆசிரியர்களுக்கு 47,600 - 1,51,100 ரூபாய் என்ற விகிதத்தின் கீழ் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
டில்லி அரசுப் பள்ளிகளில் தற்போது 9,500க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கின்றனர்.
இருப்பினும், அனுமதிக்கப்பட்ட 301 ஆசிரியர் பணியிடங்களில் சிறப்புக் குழந்தைகளுக்கு 283 முதுநிலை ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், பல மாணவர்களின் கல்வித் திறன் பின்தங்கிய நிலையில் உள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் 2009, மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆகியவற்றுடன் இணைந்த அரசின் உள்ளடக்கிய கல்விக் கொள்கைகள் போதுமான அளவில் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, மேலும் 200 முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும்.
டில்லி அரசின் நிர்வாகச் சீர்திருத்தம், திட்டமிடல் மற்றும் நிதித் துறைகளுடன் கலந்தாலோசித்து, கல்வி இயக்குநரகம் தலைமையில் ஆலோசனை நடத்திய பிறகே கவர்னர் இந்த ஒப்புதலை அளித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.