UPDATED : மார் 13, 2013 12:00 AM
ADDED : மார் 13, 2013 07:42 AM
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், 2 நாள் வேலைவாய்ப்பு மேளா, நேற்று நடந்து முடிந்தது. இதில், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை உட்பட பல மாவட்டங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும், ஊட்டி எல்.ஐ.சி.,உட்பட அரசு துறைகளும் பங்கேற்று, ஆட் தேர்வு நடத்தின.
ஊட்டி அரசுக் கலைக்கல்லூரி, எமரால்டு ஹைட்ஸ், ஊட்டி அரசு பாலிடெக்னிக், ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரி, ஜோசப் ஆசிரியர் பயிற்சி பள்ளி, கோத்தகிரி என்.பி.ஏ., பாலிடெக்னிக், குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரி, கேத்தி சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், முன்னாள் மாணவர்கள் என, 3,000 பேர் கல்லூரி வளாகத்தில் குவிந்தனர்.
ஊட்டி அரசு கலைக் கல்லூரி முதல்வர் டாக்டர் கோபி கூறியதாவது: இந்த வேலைவாய்ப்பு மேளாவில், 1,600 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 6,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம், உறுதியாகியுள்ளது.
வெளியூர்களில் உள்ள நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அதற்கேற்ற திறமையை மாணவ, மாணவியர் வளர்த்து கொண்டால் போதும். பல நிறுவனங்கள் வேலை வாய்ப்புக்கு முயற்சிக்கும் மாணவ, மாணவியரின் தகவல்களை &'டேட்டா பேஸ்" முறையில் பதிவு செய்து, தங்களுக்கு வழங்கும்படி கேட்டுள்ளனர்.
எனவே, இந்த வேலைவாய்ப்பு மேளா தொடர்ந்து நடக்கும். ஓரிரு நிறுவனங்கள், கல்லூரியில், இன்றும் சிறப்பு முகாம் நடத்தி, தங்கள் நிறுவனத்திற்கு ஆட் தேர்வு செய்யவுள்ளன. இவ்வாறு டாக்டர் கோபி கூறினார்.
