UPDATED : டிச 09, 2014 12:00 AM
ADDED : டிச 09, 2014 11:46 AM
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவன், தேசிய போட்டிகளில் முதலிடம் பெற்று, மாவட்டத்துக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
வீரபாண்டி சி.ஏ., ராஜா நர்சரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் விஜய் கதிர்வேல், 7. பால் வடியும் முகம் மாறாத இச்சிறுவன், மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்று, பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் தீவிர பயிற்சியால், கட்டா, குமித்தே பிரிவுகளில், எதிராளியை மிரட்டுகிறார்.
நடப்பாண்டில், உடுமலையில் நடந்த 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு போட்டியில், தேசிய அளவில் முதலிடம் பெற்றார். 2011ல் திருப்பூரில் ஆலன் திலக் சிட்டோரியா அமைப்பு நடத்திய மாநில அளவிலான போட்டியிலும், அதே ஆண்டு உடுமலையில் நடந்த தேசிய அளவிலான போட்டியிலும் முதலிடம் பெற்றார்.
கடந்த 2012ல், மாவட்ட அளவிலான கராத்தேவில் முதலிடம் பெற்ற விஜய் கதிர்வேல், கடந்தாண்டு மாநில அளவிலான கராத்தே போட்டியிலும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். பல்லடத்தில் நடந்த மாவட்ட கராத்தே போட்டியிலும் முதலிடம் பிடித்துள்ளார்.
