அரசு துவக்கப் பள்ளிக்கு ரூ.2 லட்சத்தில் 'பெஞ்ச்' தலைமை ஆசிரியை சேவைக்கு குவியும் பாராட்டு
அரசு துவக்கப் பள்ளிக்கு ரூ.2 லட்சத்தில் 'பெஞ்ச்' தலைமை ஆசிரியை சேவைக்கு குவியும் பாராட்டு
UPDATED : நவ 11, 2025 07:37 AM
ADDED : நவ 11, 2025 07:38 AM
விழுப்புரம் :
விழுப்புரம் அடுத்த மரகதபுரம் துவக்கப் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை, தான் பணிபுரியும் பள்ளிக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெஞ்சுகளை வழங்கியுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வருபவர் அரசி. தற்போது பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ளார்.
இவர் வரும் மே மாதம் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், பள்ளிக்கு தேவையானதைச் செய்ய வேண்டும் என விரும்பினார்.
மழைக்காலங்களில் பள்ளி சிமென்ட் தரை அதிக ஈரப்பதம் ஏற்படுவதால், தரையில் அமர்ந்து பயிலும் மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதை அவர் கவனித்துள்ளார்.
இதற்கு தீர்வாக இவரது பேத்தி ஷிவாணி மற்றும் நண்பர்களுடன் இணைந்து 1 லட்சம் ரூபாய் திரட்டியுள்ளார்.
தலைமை ஆசிரியை அரசி தனது பங்காக 1 லட்சம் ரூபாய் செலுத்தி மொத்தம் 2 லட்சம் ரூபாய் செலவில் 60 மாணவர்கள் அமரக்கூடிய 30 புதிய பெஞ்சுகளை வாங்கி, பள்ளிக்கு வழங்கியுள்ளார்.
தலைமை ஆசிரியரின் இந்தச் சீரிய முயற்சியால், அந்த பள்ளி மாணவர்கள், பெஞ்சுகளில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.
தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றிய பள்ளிக்கு, தனது ஓய்வுக்கு முன்பாக, ஒரு முக்கிய பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திய தலைமை ஆசிரியை அரசி மற்றும் உறுதுணையாக கை கொடுத்த அவரது பேத்தி ஷிவாணியின் சேவைக்கு, கிராம மக்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

