ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரியில் 25வது பட்டமளிப்பு விழா
ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரியில் 25வது பட்டமளிப்பு விழா
UPDATED : ஆக 24, 2026 10:40 AM
ADDED : ஆக 24, 2026 10:41 AM

சென்னை:
ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரியின் 25வது பட்டமளிப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில், தமிழக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 1,968 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
சென்னை, பூந்தமல்லி அடுத்த தண்டலத்தில் ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியின் 25வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
கல்லுாரி துணை தலைவர் அபய் மேகநாதன் தலைமை வகித்தார். விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சிறப்புரையாற்றி 1,968 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில், 10 மாணவர்கள் முனைவர் பட்டமும், 83 மாணவர்கள் தங்கப் பதக்கமும் பெற்றனர்.
பின், பிரபாகர் பேசியதாவது:
நாங்கள் படிக்கும் காலத்தில், சந்தேகம் இருந்தால் நுாலகம் சென்று புத்தகத்தை தேடி படிப்போம். இன்றைய காலத்தில் மாணவர்கள், கூகுள், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் எளிதாக தெரிந்து கொள்கிறீர்கள்.
எந்த துறைக்கு சென்றாலும், நல்ல மனிதனாக இருக்க வேண்டும். சோஷியல் மீடியாவை பயன்படுத்துங்கள்; அது உங்களை பயன்படுத்த விடாதீர்கள்.
தற்போதைய காலத்தில் எளிதாக 'மீம்ஸ்' உருவாக்கி பரப்பிவிடுகின்றனர். என் படத்தை வைத்து வரும் மீம்ஸ்களை நான் ரசிக்கிறேன். மீம்ஸ் போடுங்கள்; அது மனிதர்களை காயப்படுத்தும் வகையில் போடாதீர்கள். உண்மை உலகம் எப்படி உள்ளது என்பதை, மாணவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், கல்லுாரி முதல்வர் எஸ்.என்.முருகேசன், ஆலோசகர் சி.ஆர்.முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
