UPDATED : ஜூன் 22, 2011 12:00 AM
ADDED : ஜூன் 22, 2011 11:02 AM
நாட்டிலுள்ள ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்பதற்கு மாணவர்களுடைய ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. படித்து முடித்தவுடனேயே அதிக சம்பளத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. இதில் சேர்வதற்கு ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
பீகாரில் உள்ள "சூப்பர் 30' என்ற ஐ.ஐ.டி., பயிற்சி நிறுவனம் ஆண்டுதோறும் ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறது. ஆண்டுதோறும் 30 ஏழை மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார் இந்நிறுவன நிர்வாகி ஆனந்தகுமார். 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இந்நிறுவனத்தில் படித்த 30 மாணவர்களும் வெற்றி பெற்று "ஹாட்ரிக்' சாதனை படைத்தனர்.
2011ம் ஆண்டுக்கான நுழைவுத்தேர்வில் 30 மாணவர்களில் 24 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டை ஒப்பிடும்போது ரிசல்ட் குறைந்துள்ளது. இந்தாண்டு, பாடத்திட்டம் மாற்றப்பட்டது இதற்கு காரணமாக இருக்கலாம் என ஆனந்தகுமார் தெரிவித்தார். கடின உழைப்பு 2003ம் ஆண்டு இந்நிறுவனத்தை துவக்கினார் ஆனந்தகுமார்.
பின்தங்கிய 30 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு, உணவு, இருப்பிடம், பயிற்சியை இலவசமாக வழங்குகிறார். தினமும் 16 மணி நேரம் பயிற்சி அளிக்கிறார். கடின உழைப்பு, முறையான பயிற்சி, மேற்பார்வை ஆகியவை வெற்றிக்கு காரணம் என்கிறார் ஆனந்தகுமார்.
டைம்ஸ் இதழ் பாராட்டு சமீபத்தில் டைம்ஸ் பத்திரிக்கை "2010ல் ஆசியாவின் சிறந்தவை' என்ற தலைப்பில் சூப்பர்30 நிறுவனத்தை பற்றி செய்தி வெளியிட்டு கவுரவப்படுத்தியது. அதில் இந்தியாவில் ஆண்டுதோறும் 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வு எழுதுகின்றனர். ஆனால் அதில் 10 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். இதில் சூப்பர்30 நிறுவனத்தின் பங்களிப்பு மகத்தானது என பாராட்டியுள்ளது.