UPDATED : நவ 25, 2009 12:00 AM
ADDED : நவ 25, 2009 12:49 PM
பெண் குழந்தைகள் எட்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்று ஒன்பதாவது சேரும்பட்சத்தில், அவர்களது பெயரில் 3,000 ரூபாய் டிபாசிட் செய்யும் மத்திய அரசின் திட்டப்படி, தமிழக கல்வித் துறை, 36 கோடியே 38 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் உயர்நிலைக் கல்விக்கு ஊக்கத் தொகை அளிக்கும் மத்திய அரசின் திட்டம், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டப் படி, பெண் குழந்தைகளின் பெயரில் 3,000 ரூபாய் வங்கியில் டிபாசிட் செய்யப்படும். அவர்கள் 18 வயதை அடையும் போது, இத்தொகையை எடுத்துக் கொள்ளலாம்.
இத்திட்டப்படி, அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி பள்ளிகளில் கடந்த கல்வியாண்டு முதல், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஒன்பதாவது வகுப்பு சேர்ந்துள்ள அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பெண்கள், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்தியாலயாக்களில் எட்டாவது தேர்ச்சி பெற்று, அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் அல்லது உள்ளாட்சி பள்ளிகளில் ஒன்பதாவது சேர்ந்துள்ள பெண்கள் பயன்பெறலாம்.இப்பெண்களுக்கு திருமணமாகி இருக்கக் கூடாது. ஒன்பதாவது சேரும் போது 16 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும். தனியார் பள்ளிகள் மற்றும் மத்திய அரசின் இதர பள்ளிகளில் படிக்கும் பெண்கள், இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.
இதற்கான நிதியை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணைகளாக மத்திய அரசு, ஒதுக்கீடு செய்யும். பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தகுதியுள்ள மாணவிகளின் பெயரில், அருகிலுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அல்லது பொதுத் துறை வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்க வேண்டும்.இத்திட்டத்துக்காக, 36 கோடியே 38 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது.இத்தொகை, தமிழக அரசின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்தொகையை எடுத்து, டில்லியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின், மெயின் கிளையில் டிபாசிட் செய்யுமாறு, பள்ளிக் கல்வி இயக்குனருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதன் பயனாளிகளின் பெயர் பட்டியலை, அரசு இணையதளத்தில் வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
