UPDATED : ஆக 09, 2023 12:00 AM
ADDED : ஆக 09, 2023 09:25 AM
தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள, 10,292 இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., வழியே, கடந்த ஆண்டு ஜூலை, 24ல் போட்டி தேர்வு நடந்தது. இதில், 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆண்டு மார்ச்சில் தேர்வு முடிவு வெளியானது. ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, கடந்த, 20ம் தேதி பணி நியமன கவுன்சிலிங் துவங்கியது.முதற்கட்டமாக, கிராம நிர்வாக அதிகாரி பதவியில், 425 இடங்கள்; இளநிலை உதவியாளர், 5,256; வரி வசூலிப்பாளர், 69; கள உதவியாளர், 20; கிடங்கு காப்பாளர் 1 ஆகிய, 5,776 இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது. மொத்தம், 8,500 பேர் அழைக்கப்பட்டனர். நேற்று வரை, 20 நாட்கள் கவுன்சிலிங் நடந்த நிலையில், 5,300 இடங்கள் நிரப்பபட்டன. இன்னும், 400 இடங்கள் காலியாக உள்ளன. கவுன்சிலிங் நாளை நிறைவு பெறுகிறது. மீதமுள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. மேலும் விபரங்களை, www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
