UPDATED : ஆக 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்வி நிறுவனங்களில் ராகிங்கில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் ராகிங்கில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி., தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்ச்சர், எம்.ஐ.டி., ஆகிய கல்லூரிகளில் முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கின. இந்த நான்கு கல்லூரிகளிலும் ராகிங் நடைபெறுவதைக் கண்காணிக்க தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கிண்டி பொறியியல் கல்லூரியில் ராகிங் செய்ததாக நான்கு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியதாவது:
கிண்டி பொறியியல் கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பகல் நேரத்தில் சில சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை லெப்ட், ரைட் என மார்ச் பாஸ்ட் செய்ய வைத்திருக்கின்றனர். இதை நேரில் பார்த்த சில பேராசிரியர்கள் சம்பந்தப்பட்ட நான்கு மாணவர்களை பிடித்து ராகிங் கண்காணிப்பு குழுவிடம் ஒப்பபடைத்தனர். ராகிங்கில் ஈடுபட்ட நான்கு மாணவர்களும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்கள் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நான்கு மாணவர்களிடமும் விளக்கம் கேட்கப்படும். அது ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் இருந்தால் அவர்கள் மீண்டும் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அந்த நான்கு மாணவர்களுக்கும் மீண்டும் ஹாஸ்டலில் சேர அனுமதி வழங்கப்படாது என்றார் மன்னர் ஜவஹர்.

