UPDATED : டிச 02, 2009 12:00 AM
ADDED : டிச 02, 2009 05:48 PM
அ நிறம் | அளவு
இதற் கிடையே, தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் சில தேர்வு மையங்களில் கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக ஏராளமானோர் தேர்வெழுத முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ. எம்.,) சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், கடந்த நான்கு நாட்களாக நடந்து வருகிறது. 2.4 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதுகுறித்து, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கம்ப்யூட்டர் பிரச்னையில், 8,000க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மிகவும் அதிக எண்ணிக்கை. இதுகுறித்த விரிவான விவரங்கள் தற்போது தான் எங்களுக்கு கிடைத்துள்ளது. ஆன் - லைன் முறையில் தேர்வெழுதும் போது, இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதை முன் கூட்டியே அறிந்து, அதை தவிர்க்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தேர்வு தொடர்பான பிரச்னைகளில் மத்திய அரசு தலையிட முடியாது. இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் என்பது சுயாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு. தேர்வு நடத்தும் பொறுப்பு ஐ.ஐ.எம்., கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
இந்த பிரச்னை குறித்து, ஐ.ஐ.எம்., வட்டாரங்கள் கூறியதாவது: இந்த ஆன் - லைன் நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பு, அமெரிக்காவைச் சேர்ந்த புரோமெட்ரிக் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. கன்பிளிசேர் மற்றும் டபிள்யூ-32 என்ற இரு வைரஸ்கள் தாக்கியது தான், சர்வரில் குளறுபடி ஏற்பட்டதற்கான காரணம் என, கண்டறியப்பட்டுள்ளது. இதை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமுள்ள தேர்வுகள் எந்த பிரச்னையும் இன்றி நடப்பதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டோருக்கு,
மறு தேர்வு நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு ஐ.ஐ.எம்., வட்டாரங்கள் தெரிவித்தன.
பூனையை
எலி தின்று விட்டதா? : இந்திய மேலாண்மைக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வில்(கேட்) குளறுபடி ஏற்பட்டது குறித்து, லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சியினர் பிரச்னையை கிளப்பினர். தொழில் நுட்பத்துறையில் சிறந்து விளங்கும் இந்தியாவுக்கு, இந்த சம்பவம் ஒரு அவமானம் என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். லோக்சபாவில் கேள்வி நேரம் முடிந்ததும், பா.ஜ., உறுப்பினர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிடுகையில், கேட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் ஏராளமான திறமையான மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கம்ப்யூட்டரில் உள்ள மவுஸ் (எலி), கேட் (பூனை) தேர்வை தின்றுவிட்டதா? உலக அளவில் தகவல் தொழில் நுட்பத்தில் தலை சிறந்து விளங்கும் இந்தியாவில், ஆன் - லைன் முறையில் முதன் முதலாக நடந்த தேர்வில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடி அவமானமாக உள்ளது. இனி இந்த குளறுபடி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்&' என்றார். இதே பிரச்னையை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர்.