UPDATED : ஆக 24, 2024 12:00 AM
ADDED : ஆக 24, 2024 07:45 PM
பாரபங்கி:
உத்தர பிரதேசத்தில் தனியார் பள்ளியின் பால்கனி இடிந்து விழுந்ததில், 40 குழந்தைகள் காயம் அடைந்தனர்.
உ.பி.,யில் உள்ள பாரபங்கி மாவட்டத்தின் ஜஹாங்கிராபாத் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், நேற்று காலை பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்க ஏராளமான மாணவர்கள், பள்ளியின் முதல் மாடியில் இருந்து கீழே வந்து கொண்டிருந்தனர்.
ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டதால், திடீரென பால்கனி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களை போலீசார் மற்றும் அப்பகுதியினர் மீட்டனர். இதில், 40 குழந்தைகள் காயம் அடைந்தனர். பலருக்கு முகம், கழுத்து, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்ததை தொடர்ந்து மாவட்ட மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இதில், ஐந்து குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.