UPDATED : ஆக 24, 2024 12:00 AM
ADDED : ஆக 24, 2024 07:44 PM
பெங்களூரு:
ராணுவ வீரர்கள் மனைவியர் நல சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான சர்வதேச திரைப்பட விழா, பெங்களூரில் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.
ராணுவ வீரர்கள் மனைவியர் நல சங்கம் சார்பில், பெங்களூரு நாகஷெட்டிஹள்ளியில் உள்ள ஏ.எஸ்.சி., ராணுவ மையம் மற்றும் கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கான, சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா நேற்று துவங்கியது.
சிறப்பு விருந்தினர்களாக லெப்டினன்ட் ஜெனரல் பி.கே., ரெப்ஸ்வால், ஏ.எஸ்.சி., ராணுவ மையத்தின் கமாண்டண்ட் ரோகித் சேதி, பள்ளி சினிமா சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குனர் சையது சுல்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திரைப்பட விழாவில் பல பள்ளிகளின் 300 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான, திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
மேலும் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் கலாசாரம், சமூக நீதி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட பல கரு பொருட்களை அடிப்படையாக கொண்டும், திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பார்த்து ரசித்தனர்.
எல்.எக்ஸ்.எல்., நிறுவன தலைவர் சையது சுல்தான் அகமது பேசுகையில், திரைப்படங்கள் நமது உலகத்தை வடிவமைக்கும் சக்தி கொண்டது. மாணவர்களுக்கான சர்வதேச திரைப்பட விழா, மாற்றத்திற்கான முயற்சியாக இருக்கும். அதே நேரம் படைப்பு ஆற்றல், புதுமையான கல்வி அணுகுமுறையையும் அடிகோடிட்டு காட்டுகிறது. திரைப்பட கண்காட்சி பரந்த கண்ணோட்டத்துடன் நடத்தப்படுகிறது, என்றார்.
விழாவில் கலந்து கொண்ட மற்ற முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள் தங்களது அனுபவத்தை வெளிப்படுத்தினர்.