UPDATED : ஏப் 12, 2024 12:00 AM
ADDED : ஏப் 12, 2024 05:26 PM

ஜெருசலேம்:
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் நடந்து வருகிறது.
இந்த போருக்கு முன், இஸ்ரேலில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில், பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் இருந்து 80,000 பேரும், காசா பகுதியில் இருந்து 17,000 பேரும் பணியாற்றி வந்தனர்.
போரைத் தொடர்ந்து, இவர்களுக்கான பணி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இவர்கள் பாலஸ்தீன பகுதிகளுக்கு திரும்பினர். இதனால், இஸ்ரேலில் கட்டுமான பணிகளில் பெரும் தேக்கம் ஏற்பட்டது.
கடந்தாண்டு டிசம்பரில் பிரதமர் மோடியுடன் பேசியபோது, கட்டுமான பணிகளுக்கு இந்தியர்களை அனுப்பும்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக, இந்தியா - இஸ்ரேல் அரசுகள் இடையே ஒப்பந்தமும் செய்யப்பட்டது. பகுதி பகுதியாக இந்திய தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
அரசு அமைப்புகள் சார்பில், இந்த தொழிலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த மாத இறுதிக்குள், 6,000 இந்தியர்கள் வந்து சேருவர் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.