டிசி வழங்கும்போதே ஸ்பாட் அட்மிஷன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தயார்
டிசி வழங்கும்போதே ஸ்பாட் அட்மிஷன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தயார்
UPDATED : ஏப் 12, 2024 12:00 AM
ADDED : ஏப் 12, 2024 10:59 AM

பொள்ளாச்சி :
தொடக்கப்பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 'டிசி' வழங்கும்போதே, ஸ்பாட் அட்மிஷன் வழங்க, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில், நகர் மற்றும் கிராமங்களில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்களை ஆசிரியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதேபோல, காலை சிற்றுண்டி திட்டம், 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டின் பலன், நலத்திட்ட உதவிகள், உயர்கல்வி உதவித் தொகை குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மே மாதம், முதல் வாரத்தில், தொடக்கப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 'டிசி' வழங்கும்போது, அங்கேயே ஸ்பாட் அட்மிஷன் வழங்க, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்ச்சி அடிப்படையில் எமிஸ் தளத்தில், பிரமோஷன் வழங்கப்படும். இதற்காக, தொடக்கப்பள்ளி மற்றும் பள்ளிக்கல்வி, மாவட்ட கல்வி அலுவலர்களிடமிருந்து, ஒப்புதல் பெறப்பட்டு, வரும், 26, 27 ஆகிய தேதிகளில் புரமோஷன் பணி துவக்கப்படும்.
அதிலும், குறிப்பாக, 5, 8, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புரமோஷன் வழங்கப்பட்டு, அந்த விபரம் 'காமன் போலில்' வைக்கப்படும். அதன்படி, மே முதல் வாரத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முறையாக உறுதிப்படுத்தப்படும்.
இதனால், தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், அருகே உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் சேருவதற்காக, 'ஸ்பாட் அட்மிஷன்' நடத்தப்படும். இதற்காக, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நேரடியாக தொடக்கப் பள்ளிக்குச் சென்று அட்மிஷன் பணிகளை மேற்கொள்வர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.