அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள்: 7 ஆண்டுகளாக இந்தியர்களே அதிகம்!
அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள்: 7 ஆண்டுகளாக இந்தியர்களே அதிகம்!
UPDATED : நவ 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கடந்த 2006-07ம் கல்வி ஆண்டில் 83 ஆயிரத்து 833 இந்திய மாணவர்கள் உயர்கல்வி பெற அமெரிக்கா சென்ற நிலையில், இந்தாண்டில் 94 ஆயிரத்து 563 மாணவர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். இது அமெரிக்க கல்வி மீது இந்திய மாணவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தையே காட்டுகிறது.
அமெரிக்காவில் படிக்கும் ஒட்டுமொத்த வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை கடந்தாண்டில் 5 லட்சத்து 83 ஆயிரமாக இருந்தது. இது 2007-08ல் 6 லட்சத்து 23 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதில் இந்திய மாணவர்களின் பங்கு முன்பிருந்த 7 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று ஒபன் டோர்ஸ் என்ற ஆண்டு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக, சீன மாணவர்கள் அதிகளவில் அமெரிக்காவில் உயர்கல்வி பெறுகின்றனர். கடந்தாண்டு 67 ஆயிரத்து 723 ஆக இருந்த சீனா மாணவர்களின் எண்ணிக்கை, இந்தாண்டு 81 ஆயிரத்து 127 ஆக அதிகரித்துள்ளது. இது 20 சதவீத உயர்வாகும். இருப்பினும், 2001-02ம் ஆண்டு முதல் சீனாவை விட இந்திய மாணவர்களே அதிகளவில் அமெரிக்கா சென்று கொண்டிருக்கின்றனர்.
அதற்கடுத்ததாக, தென் கொரியா- 69,124, ஜப்பான் - 33,974, கனடா - 29,051 ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஐந்து நாடுகள் மட்டுமே அமெரிக்காவில் உள்ள மொத்த வெளிநாட்டு மாணவர்களில் 49 சதவீதம். ஆனால், வெளிநாட்டு கல்வி பெறும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு 8.2 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிட்டால், 150 சதவீதம் அதிகம்.
எது எப்படியோ, அமெரிக்காவுக்கு கிடைக்கும் முக்கிய வருவாயில் வெளிநாட்டு மாணவர்களின் வருகை முக்கிய பங்கு வகிக்கிறது.
