வெளிநாட்டு பல்கலைகளில் சேர்ந்த 84 மாணவர்களுக்கு உதவித்தொகை
வெளிநாட்டு பல்கலைகளில் சேர்ந்த 84 மாணவர்களுக்கு உதவித்தொகை
UPDATED : நவ 16, 2026 10:20 AM
ADDED : நவ 16, 2026 10:21 AM
ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு சமூக நீதித்துறை அளித்துள்ள விளக்கம்:
அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தில், நடப்பாண்டில் மொத்தம், 366 மாணவர்கள் உதவித்தொகைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது வரை, 165 மாணவர்கள் தாங்கள் சேர்க்கை பெற்ற வெளிநாட்டு பல்கலைகளில் சேர்ந்து உள்ளனர். மீதமுள்ள, 201 மாணவர்கள், அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதத்திற்குள் வெளிநாட்டு பல்கலைகளில் சேர உள்ளனர்.
பல்கலைகளில் சேர்ந்த, 165 மாணவர்களில், 140 பேர் சேர்க்கை விபரங்கள் மற்றும் பல்கலை நிதி கேட்பு உள்ளிட்டவற்றை இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர். மீதம் உள்ள, 25 மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கவில்லை.
விண்ணப்பித்தவர்களில், 84 மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் செலவுகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ.30.24 கோடி ரூபாய் இது வரை விடுவிக்கப்பட்டு உள்ளது. மற்ற மாணவர்களுக்கு பல்கலை வங்கிக் கணக்கு விபரங்கள் கேட்கப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் எவ்வித தாமதமும் இல்லை.
மேலும், ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகமான 'தாட்கோ' வாயிலாக, நடப்பு ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட, 116 மாணவர்களுக்கு, 9.50 கோடி ரூபாய் சிறப்பு கல்விக் கடன் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது.
