UPDATED : மார் 25, 2013 12:00 AM
ADDED : மார் 25, 2013 10:24 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் அமைக்க, 3கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால், மருத்துவ கல்லூரி வளாகத்தின் பாதுகாப்பு, கேள்விக்குறியாகி உள்ளது.
செங்கல்பட்டில், அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. கல்லூரியையொட்டி, மாணவ, மாணவியர் தங்கும் விடுதி உள்ளது. இந்த வளாகம், 400 ஏக்கர் பரப்பளவும், 7 கி.மீ., சுற்றளவும் கொண்டதாக உள்ளது. மருத்துவமனை துவக்கத்தில், குறைவான உயரமுள்ள சுற்றுச்சுவர் உடையதாக அமைக்கப்பட்டது. இந்த சுற்றுச் சுவரில் விரிசல் ஏற்பட்டு, தற்போது பலவீனமாக உள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு, பல்வேறுசமூகத்தினர், 500 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். அதை, சமூக விரோதிகள் பலர் ஆக்கிரமித்து, விற்பனை செய்துள்ளனர். வளாகத்தை சுற்றியுள்ள பகுதியை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புக்களை அகற்ற மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில், வருவாய் துறையினருக்கு பலமுறை பரிந்துரை கடிதம் கொடுத்தும், நிலங்களை மீட்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
கல்லூரி வளாகத்தின் அருகில், குடியிருப்பு பகுதிகளில், கல்லூரி சுவரை அகற்றிவிட்டு, கல்லூரி இடத்தையும் ஆக்கிரமித்து உள்ளனர். இது மட்டுமல்லாது, வளாகத்தில் உள்ள முட்புதரில் சிலர், மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு வசதியாக, சுவரில், பல இடங்களில் ஓட்டை போட்டு வைத்துள்ளனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் கல்லூரி இடத்தில் வீடுகளை கட்டும்போது, மருத்துவமனை நிர்வாகத்தினர் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இதை, சில அரசியல் பிரமுகர்கள் பயன்படுத்தி, மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தை, மனைகளாக்கி, பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், தற்போது, அப்பகுதியில்சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன. கல்லூரி பாதுகாப்பும் கேள்விக் குறியாக உள்ளது. பழைய சுவரை அகற்றி விட்டு, புதிய சுற்றுச்சுவரை அமைக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து, கடந்த ஓராண்டிற்கு முன், 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இது நாள் வரையிலும், பணி துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கல்லூரி பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
