UPDATED : டிச 06, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தெற்காசிய பிராந்தியத்திற்கான பல்கலைக்கழகம் ஒன்றை தெற்காசிய பிராந்தியத்திற்கான கூட்டமைப்பு நாடுகளின் சார்பில் அமைக்கப்படவேண்டும் என்ற பிரதமர் 2005ம் ஆண்டு அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து 2007ல் புதுடில்லியில் நடந்த 14வது சார்க் மாநாட்டில் இதன் உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டன. தெற்காசியப் பல்கலைக்கழகத்தின் சட்ட திட்டங்களும் இம்மாநாட்டில் வரையறை செய்யப்பட்டன.
முழுமையான செயல்பாட்டுச் சுதந்திரத்துடன் உலகளாவிய பார்வையிலான பல்கலைக்கழகமாக இது செயல்படும் விதத்திலும் குறிப்பாக சார்க் நாடுகளின் கல்வித் தேவைகளை நிறைவேற்றும் விதமாகவும் செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து இப்பல்கலைக்கழகத்தை நடத்தும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் சர்வதேச பல்கலைக்கழகமாக செயல்படவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தை நடத்துவற்கான ஒப்புதலை சமீபத்தில் மத்திய அரசின் அமைச்சகமும் வழங்கியுள்ளது. ஐ.நா., சலுகைகள் சட்டம், 1947ன்படி இதற்கான அறிவிப்பும் வெளியிடப்படவுள்ளது. இதற்கான ஒப்புதலை தலைமையக ஒப்புதல் என்று கூறுகிறார்கள்.
இந்த ஒப்பந்தத்தின்படி தெற்காசிய பல்கலைக்கழகம் செயல்படவும் இந்தியாவுக்கும் இப்பல்கலைக்கழகத்துக்குமான உறவுகள் குறித்த வரையறைகளும் வழங்கப்பட்டுள்ளன. சார்க் அமைப்பின் மீதான இந்தியாவின் அக்கறையையும் பொறுப்புணர்ச்சியையும் பறைசாற்றும் விதத்தில் இந்த முடிவு இருப்பதாக இந்தியாவின் மத்திய மனித வள அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
இப்பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்புகள் இந்தியா முழுமையும் தவிர்த்து சார்க் அமைப்பு நாடுகள் அமையவுள்ள மையங்களுக்கும் பொருந்தும் என தெரிகிறது. தெற்காசியாவிலுள்ள மக்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றுதல், தகவல் பரிமாற்றம், ஒற்றுமையுணர்வைப் பேணுதல் போன்ற பல்முனை நோக்கங்களுடன் துவங்கப்படும் தெற்காசிய பல்கலைக்கழகம் வரும் ஆகஸ்ட் 2010 முதல் புதுடில்லியில் செயல்படத் துவங்கும் என்று தெரிகிறது.
