UPDATED : நவ 26, 2009 12:00 AM
ADDED : நவ 26, 2009 09:57 AM
ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சுற்றுலாத்துறைச் செயலர் இறையன்பு, ஆசிரியருக்கும் மாணவர்களுக் கும் இடையே இருக்கிற உறவு என்ற தலைப்பில் பேசியதாவது:
புத்தகத்தை வடிவமைத்த நூல் ஆசிரியர் மற்றும் பாடம் சொல்லிக் கொடுக்கும் வகுப்பாசிரியர் என இருவரையும் மாணவர்களாகிய நீங்கள் சந்திக்கிறீர்கள்.மாணவர்கள் வகுப்புக்குள் போகும் போதே ஆசிரியரை நேசித்துக் கொண்டே போனால், அவர்கள் நடத்தும் ஒவ்வொரு வரியும் மனதில் ஆழமாக புரியும்.ஆசிரியரை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். சிலருக்கு, சில ஆசிரியர்களை பிடிக்காமல் போகலாம். அதற்கு காரணம் ஏதுமில்லை. வகுப்பில் கவனம் சிதறாது ஆசிரியரின் கண்களை நோக் கியே உங்களது பார்வை இருக்க வேண்டும்.
அவர்கள் சொல்லுவது மட்டுமே, உங்கள் செவிகளில் கேட்க வேண்டும்.இதுவரை எப்படி இருந்தாலும், பரவாயில்லை. நாளை முதல் ஆசிரியரை நேசியுங்கள். அப்போது பாடத்தில் கஷ்டம் என்பது இருக் காது. வக்கீல், மருத்துவர் இருவரிடமும் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். அதுபோல தெரியாத விடைகளையும் தெரிந்த மாதிரி ஆசிரியர்களிடமும் பொய் சொல்லக் கூடாது.
பாடங்களில் சந்தேகம் இருப்பின், அன்றே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.முதல் பாடம் புரியாத போது, இரண்டாவது பாடத்திற்கு தாவக் கூடாது. மேலும், வகுப்பறையில் பாடங்களை கவனிப்பது அவசியம். அப்படி வகுப்பறையில் முறையாக கவனித்தால், 50 முதல் 60 சதவீதம் பாடத்தை கிரகித்து கொள்ள முடியும்.பிறகு அதை ஒரு முறை, அன்றே வீட்டிற்கு சென்ற பின் வாசித்தால், பாடம் குறித்த நீண்ட கால ஞாபக சக்தியை பெற முடியும். அன்றைய பாடங்களை, அன்றே படிக்கும் பழக்கம் வேண்டும்.
இந்நிகழ்ச்சியின் மூலம், உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.படிப்பு என்பது ஒரு யுத்தமும் அல்ல. தேர்வு என்பது போரும் அல்ல. ஆகையால் தேர்வை கண்டு பயம் வேண்டாம். இது வரை படித்ததை எல்லாம், நாளை முதல் மீண்டும் திரும்ப படித்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு இறையன்பு பேசினார்.
