UPDATED : ஜூலை 07, 2023 12:00 AM
ADDED : ஜூலை 07, 2023 07:34 AM
அமெரிக்காவைச் சேர்ந்த டுவிட்டர் சமூக வலைதளத்தை பெரும் பணக்கார தொழிலதிபரான எலன் மஸ்க் கடந்தாண்டு வாங்கினார். இதன்பின் அவர் வலைதளத்திலும், நிறுவன நிர்வாகத்திலும் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். சமீபத்தில் டுவிட்டர் பயன்பாட்டுக்கு பல கட்டுப்பாடுகளையும் அவர் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்து இருந்தனர்.500 வார்த்தைகள்
இந்நிலையில், பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை வைத்துள்ள மார்க் ஸக்கர்பர்க்கின் மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை நேற்று அறிமுகம் செய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பின் இது உலகெங்கும் பல நாடுகளில் அறிமுகமானது. இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்கள் அந்தக் கணக்கை வைத்தே இந்த சமூக வலைதளத்தையும் பயன்படுத்தலாம். புதிதாக சேருவோர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய வேண்டும்.டுவிட்டரில் அதிகபட்சம் 280 எழுத்துகள் பதிவிட முடியும். அதே நேரத்தில் த்ரெட்ஸ் தளத்தில் 500 வார்த்தைகள் வரை பதிவிடலாம். பதிவுக்கு எத்தனை பேர் பதிலளித்துள்ளனர், லைக் தெரிவித்துள்ளனர் என்ற தகவல்களையும் பார்க்க முடியும். அதே நேரத்தில் இந்த புதிய தளத்தின் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம் கடுமையாக உள்ள 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனில் மட்டும் இந்த புதிய சமூக வலைதளம் அறிமுகமாகவில்லை.இணைந்த பிரபலங்கள்
நேற்று அறிமுகம் செய்யப்பட்ட த்ரெட்ஸ் சமூக வலைதளத்தில் முதல் ஏழு மணி நேரத்துக்குள் உலகெங்கும் ஒரு கோடி பேர் இணைந்துள்ளனர். நம் நாட்டிலும் இந்த தளத்தில் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்களும் இணைந்துள்ளனர். முதல் நாளிலேயே இந்த தளத்தில் இணைந்துள்ள முக்கியமானவர்களில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், திரை நட்சத்திரங்கள் கஜோல், தமன்னா, டாப்சி, சன்னி லியோன், டுவிங்கிள் கன்னா உள்ளிட்டோர் அடங்குவர்.த்ரெட்சில் இணைந்த தினமலர்: வாசகர்கள் வரவேற்பு
த்ரெட்ஸ் சமூக வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அதில் இணைந்த நம் நாளிதழ் தினமலர் அதில் தனி பக்கத்தை துவக்கியது. இதை கவனித்த உலகம் முழுதும் உள்ள தமிழர்கள், தினமலர் த்ரெட்ஸ் பக்கத்திற்கு அமோக ஆதரவு அளித்து பின் தொடர்கின்றனர். ஊடகத் துறையில் நடக்கும் மாற்றங்களை உடனுக்குடன் தனதாக்கி கொள்வதில் தினமலருக்கு ஈடு இணை இல்லை. உள்ளூர் செய்திகள் முதல் உலக நடப்புகள் வரை அனைத்தையும் உலகத் தமிழர்களிடம் உடனுக்குடன் சேர்ப்பதில் தினமலர் இணையதளம் முன்னணியில் உள்ளது; 122 நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் நம் இணையதளத்தின் வாசகர்களாக உள்ளனர்.போலிகளும், பொய்யுரைகளும் பரப்பப்படும் சமூக வலைதள உலகில், தினமலர் இணையதளம் நம்பகமான செய்திகளை மட்டுமே தருவதால், உலகத் தமிழர்கள் தினமலர் இணையதளத்தை நம்புகின்றனர். தினமலர் இணையதளம், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், யு டியூப் சமூக வலைதளங்களில் தனி முத்திரையை பதித்துள்ளது.இந்நிலையில், எதிலும் முன்னணியில் இருக்கும் தினமலர், த்ரெட்ஸ் சமூக வலைதளத்திலும் உடனே தன் சேவையை துவக்கியது. இந்நிலையில், நம் பக்கத்தை ஆயிரக்கணக்கான தினமலர் வாசகர்கள் உடனே பின்பற்றத் துவங்கி விட்டனர். நீங்களும் தினமலர் பக்கத்தை பாலோ செய்ய கிளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://www.threads.net/@dinamalardaily.
