UPDATED : ஆக 11, 2023 12:00 AM
ADDED : ஆக 11, 2023 10:00 AM
திண்டுக்கல்:
புத்தக கண்காட்சியில் இந்தாண்டு முதல் புத்தக தானத்திற்கான சிறப்பு முயற்சிகள் நடைபெறும் என திண்டுக்கல் மாவட்ட நுாலக அலுவலர் சரவணகுமார் தெரிவித்தார்.*மாவட்டத்தில் நுாலகங்கள் எண்ணிக்கை:
மாவட்ட மைய நுாலகம் 1, கிளை நுாலகங்கள் 62, ஊர்புற நுாலகங்கள் 90, பகுதி நேர நுாலகங்கள் 22 என 175 நுாலகங்கள் செயல்படுகிறது.* சிறை கைதிகள் நுாலக திட்டத்தில் நுாலகங்களின் பங்கு:
பேகம்பூர் கிளை நுாலகத்தில் இருந்து மாதம் 50 புத்தகங்கள் வரை மாவட்ட கிளை சிறைச்சாலை கைதிகளுக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்படுகிறது. நிலக்கோட்டை, பழநி போன்ற பகுதிகளிலும் இந்த முறையில் புத்தகங்கள்வழங்கப்படுகிறது. நன்னெறி வழிகாட்டுதல் புத்தகங்கள் மூலமாக சிறை கைதிகள் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டு குற்றங்கள் பெரிதும் குறைவதுடன், வாசிப்பின் நேசிப்பு பழக்கமும் மேம்பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.*புத்தக தானத்தை ஊக்குவிக்கும் செயல்பாடுகள்:
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக கண்காட்சியில் இந்தாண்டு புத்தக தானத்திற்கான சிறப்பு முயற்சிகள் நடைபெறும். தமிழக அரசு புத்தக கண்காட்சிக்காக இந்தாண்டு கூடுதல் நிதியாக மேலும் ரூ. 9 லட்சம் ஒதுக்கியுள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கான உண்டியல் வழங்கப்பட்டு சேமிப்பு பழக்கத்தின் மூலமாக புத்தகங்கள் வாங்க செய்து புத்தக தான சேவையையும் ஊக்கப்படுத்த உள்ளோம்.*நுாலகங்களில் போதுமான புத்தகங்கள் உள்ளனவா:
ஏராளமான புத்தகங்கள் உபரியில் கிடக்கிறது. இருந்தாலும் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் மட்டுமே அதிகம் தேவைப்படும் நிலையில் உள்ளது. வெளியீட்டாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று மேலும் புத்தகங்களின் வரவை நுாலகங்கள் எதிர்நோக்கியுள்ளன.*நுாலகங்களின் பணி நேரம்:
மைய நுாலகம், தாலுகாக்களில் செயல்படும் நுாலகங்கள் காலை 8 :00 மணி முதல் இரவு 8:00 மணி வரைசெயல்படுகிறது. பேரூராட்சிகளில் செயல்படும் நுாலகங்கள் காலை 9:00 முதல் மதியம் 12:30. மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை வேலை நேரமாக செயல்படுகிறது.*நுாலகங்களின் விடுமுறை நாள்:
வாரம் வெள்ளி கிழமையும், அரசு, தேசிய பண்டிகை தினங்களும் விடுமுறை நாளாகும். பல நேரங்களில் விடுமுறை தினங்களில் கூட போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிப்பு மேல் அக்கரை கொண்டு அவ்வப்போது திறந்து வைக்கப்படுகிறது. அந்த நாட்களில் மாணவர்கள் குரூப் டிஸ்கஷன் செய்து பயன்பெறுகின்றனர்.*போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறதா:
இதற்கான கோரிக்கை தமிழக அரசிடம் முன்வைக்கப் பட்டுள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு மையங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருப்பதால் நுாலகங்களில் இந்த பயிற்சிக்கான வரவேற்பு குறைந்துள்ளது. அவ்வப்போது தன்னார்வலர்களின் சேவையில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் மாணவர்களின் ஈடுபாடு மிகவும் குறைவாகவே உள்ளது.*ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதா:
மாவட்டம் முழுவதுமாக 40 நுாலக அலுவலர்கள் வரை தேவைப்படுகின்றனர். இதை ஈடு செய்யும் வகையில் தினக்கூலி அடிப்படையிலான பணியாளர்களை நியமித்து சமாளித்து வருகிறோம். விரைவில் பணியாளர்கள் நியமிக்கபடுவர்.*நுாலக புத்தகங்கள் பராமரிப்பு:
ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் ஏற்ற தலைப்பில் தனித்தனியாக புத்தகங்கள் பிரித்து வைத்துள்ளோம். சம்மந்தப்பட்ட பாட பிரிவுகளுக்கான புத்தகங்களை தேடி கொடுப்பதில் நுாலக அலுவலர்கள் பயனாளிகளுக்கு பெரிய அளவில் உதவுகின்றனர். பொதுநலத்தில் சுயநலம் தேடும் சிலர் நுாலக புத்தகங்களை திருடி செல்வதால் சேவைப்பணி பெரிதும் பாதிப்படைகிறது, என்றார்.
