UPDATED : ஆக 17, 2023 12:00 AM
ADDED : ஆக 17, 2023 09:45 AM
சென்னை:
பணி நிரந்தரம் கோரி, மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தினர்.அரசு பள்ளிகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், கடந்த 14ம் தேதி உண்ணாவிரத போராட்டம் துவங்கினர்; 5 பேர் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவொளி வேண்டுகோளை ஏற்று, உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு, காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர்.இது குறித்து, மாற்றுத்திறனாளி பகுதிநேர ஆசிரியர் சங்க தலைவர் ஜலீல் முகைதீன் கூறியதாவது:
அரசு பள்ளிகளில், 2012ம் ஆண்டு முதல், 260 பேர் பணியாற்றுகிறோம். மாதம், 10,000 ரூபாய் தொகுப்பூதிய சம்பளம். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, இரண்டு ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் தொடர்ச்சியாக பணியாற்றினால், அவர்களை விதிகளை தளர்த்தி பணி நிரந்தரம் செய்யலாம் என, 2008ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி அரசாணை பிறப்பித்தார். அதை நடைமுறைப்படுத்தி, எங்கள் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த ஒற்றை கோரிக்கை நிறைவேறும் வரை, எங்கள் போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
