UPDATED : ஆக 23, 2023 12:00 AM
ADDED : ஆக 23, 2023 09:30 AM
அவிநாசி:
அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில், தமிழ் தழைத்தோங்க வேண்டும் என திரைப்பட பாடலாசிரியர் ராசி அழகப்பன் பேசினார்.திரைப்பட இயக்குனர், கவிஞர், எழுத்தாளர் என்ற பன்முகங்களைக் கொண்ட ராசி அழகப்பன், அவிநாசி கலைக்கல்லுாரி, தமிழ் மன்றத் துவக்கவிழாவில் பங்கேற்று பேசியதாவது:
அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில், தமிழ் தழைத்தோங்கினால் தான், அடுத்த தலைமுறை உயர்ந்து நிற்கும். கரகாட்டம், மயிலாட்டம் என, சங்க காலத்து பெருமைகள் ஏராளம்; அவற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும். 195 நாடுகளில், 6,500 மொழிகள் உள்ள கால கட்டத்தில், இன்னும் உயிர்ப்புடன், உணர்வுடன் கலந்திருப்பது, தமிழ் மொழி தான்.நம் மக்கள் பலதரப்பட்ட நாடுகளில் பரந்து விரிந்த போது, தொன்மையான தமிழ் மொழி அழிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, விஞ்ஞானத்தில் தமிழை கொண்டு வந்து விட்டனர். தமிழை அழிக்க முடியாது.பாமர மக்களின் மனதில் எளிதாக சென்று சேர்வது, திரைப்பட பாடல்கள். இன்றைய பாடலாசிரியர்கள் பலர், வியாபார நோக்கில், தமிழ் பாடல்களில் பிற மொழி கலப்பு செய்கின்றனர். இதனால், தமிழ் வளராது; இது, ஏற்புடையதும் அல்ல. பாடல்களில், இயன்றவரை தமிழைப் பயன்படுத்த வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழில் பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கு, வரி விலக்கு அளித்தார். அதுபோன்ற சலுகையை, மீண்டும் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
